ரஞ்சன் ராமநாயக்கவை மன்னித்து விடுவியுங்கள் : ஜனாதிபதி கோட்டாபயவிடம் வேண்டுகோள் விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

Breaking

Wednesday, September 1, 2021

ரஞ்சன் ராமநாயக்கவை மன்னித்து விடுவியுங்கள் : ஜனாதிபதி கோட்டாபயவிடம் வேண்டுகோள் விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ள அவர், இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உச்ச நீதிமன்றத்தினால் 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 12ஆம் திகதி முதல் 232 நாட்களாக சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்க ஒரு அப்பாவி என்பதோடு, உண்மைக்காக பேசுபவர் என எல்லோரும் அறிவார்கள் எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாஸ, ஒரு கலைஞராக பல வருடங்களாக பிரபல நடிகராகவும், மக்கள் கலைஞனாகவும் பெரும் புகழைக் கொண்டவராகவும் உள்ளார் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஒரு அரசியல்வாதியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களின் உச்ச வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், அரசியல் ரீதியாகவோ, வேறு ஏதேனும் வகையிலோ முறையற்ற விடயங்களில் அல்லது ஊழல் விடயங்களில் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லையென யாவரும் அறிவார்கள் என, சஜித் பிரேமதாஸ தனது கடிதத்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரை விடுவிப்பது தொடர்பில் தலையிடுமாறு, கட்சி பேதமின்றி பல்வேறு அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி மதத் தலைவர்கள், கலைஞர்கள், சட்ட வல்லுனர்கள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதோடு, தங்களுக்கும் அவ்வாறான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

அவ்வாறான நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் தான் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பத்தில் தெரிவித்தபோது, தாங்கள் சாதகமான பதிலை அளித்தமை தொடர்பில் தனது நன்றியை தெரிவிப்பதாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் மேற்குறிப்பிட்ட தரப்பினர் மீண்டும் மீண்டும் என்னுடன் கேட்பதோடு, கோரிக்கைகளை முன்வைத்தும் வருகின்றனர். அக்கோரிக்கைகள் நியாயமானது என நானும் அது போன்று நீங்களும் நம்புவீர்களென எதிர்பார்ப்பதாக சஜித் பிரேமதாஸ அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில், ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் மிக விரைவாக தங்களது சிறந்த பதிலை தான் எதிர்பார்ப்பதாக, ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment