உயிர் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள அமைச்சர் அவற்றுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டிருப்பாரானால் அது பாரதூரமான குற்றமாகும் - அம்பிகா சற்குணநாதன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

உயிர் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள அமைச்சர் அவற்றுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டிருப்பாரானால் அது பாரதூரமான குற்றமாகும் - அம்பிகா சற்குணநாதன்

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் அரசியலமைப்பின் சிறைச்சாலைகள் தொடர்பான சட்டத்திற்கமைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள இராஜாங்க அமைச்சர், சட்டங்களை மீறும் வகையில், அவற்றுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டிருப்பாரானால் அது பாரதூரமான குற்றமாகும் என்று முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைதிகளை தரக்குறைவாக நடத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் பல தரப்பினராலும் விமர்சனங்களும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் , இது குறித்து வினவிய போதே சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்குச் சென்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி , அவர்களை முழந்தாழிடச் செய்து தரக்குறைவாக நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது பாரதூரமான குற்றச்சாட்டுக்களாகும்.

காரணம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் ஏற்கனவே பல வகையிலும் பாரபட்சங்களுக்கு உட்படுத்தப்பட்டு உரிமை மீறல்கள் இழைக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரான அவர் இலங்கையின் அரசியலமைப்பின் சிறைச்சாலை சட்டங்களுக்கமைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க வேண்டிய பொறுப்பிலுள்ளவராவார்.

இவ்வாறான முக்கிய பொறுப்பிலுள்ள அமைச்சரே இவ்வாறு எமது சட்டங்களை மீறும் வகையில், அவற்றுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டிருப்பாரானால் அது பாரதூரமான குற்றமாகும். எனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது நிச்சயம் அவர் பதவி நீக்கப்பட வேண்டும். பதவி நீக்கி பின்னர் அது குறித்த விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

காரணம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தமது தற்பாதுகாப்பிற்காகக் கூட எதனையும் செய்ய முடியாத நிலையிலுள்ளவர்களாவர். இவர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பிலேயே உள்ளவர்களாவர்.

இவ்வாறிருப்பவர்களை உயர் பதவியிலுள்ள இராஜாங்க அமைச்சரொருவர் சிறைச்சாலைக்குள் சென்று துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளமை பொறுத்தமற்றது. குறித்த அமைச்சரின் செயற்பாடு தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர் கைது செய்யப்படவுமில்லை.

இலங்கையில் சட்டமானது பதவியில் இருப்பவர்களுக்கும், சாதாரண பிரஜைகளுக்கும் வெவ்வெறு விதமாக பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வாறான நிலைமை காணப்படுமாயின் நாட்டு மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு சட்ட கட்டமைப்பில் நம்பிக்கையின்மையே ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment