"ஆப்கானிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கின் முழு கட்டுப்பாடும் எங்கள் வசம்" - தலிபான் அறிவிப்பு - News View

Breaking

Monday, September 6, 2021

"ஆப்கானிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கின் முழு கட்டுப்பாடும் எங்கள் வசம்" - தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கின் முழு கட்டுப்பாடும் எங்கள் வசம் வந்து விட்டது என்று தலிபான் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடக்கே உள்ள எல்லைக்கு அருகே அமைந்துள்ளது பஞ்ஷீர் பள்ளத்தாக்கு. தலிபான் ஆளுகைக்கு எதிரான நடவடிக்கையில் 20 வருடங்களுக்கு முன்பிருந்த அதே நிலைப்பாட்டை அங்குள்ள ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி (என்ஆப்எஃப்) என்ற குழு தற்போதும் எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆளுகைக்கு கட்டுப்படாத ஒரே பகுதியாக விளங்கி வரும் இந்த இடத்தில் தலிபான்கள் ஆயுத போராளிகளுக்கும் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் எதிர்ப்புப் படைகளின் இறுதிக் கோட்டையான பஞ்ச்ஷீர் மாகாணம் தமது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக தலிபான்கள் திங்களன்று கூறியுள்ளனர்.

இந்த தகவலை தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், "எதிரி கூலிப்படையினரின் கடைசி கோட்டையான பஞ்ச்ஷீர் மாகாணம் முழுமையாக கைப்பற்றப்பட்டது" என ஒரு அறிக்கையில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார். 

சில எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதாகவும் ஏனையவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் முஜாஹித் அறிக்கையில் தெரிவித்துள்ளதுடன், தங்களை ஒடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் பஞ்ச்ஷிர் மக்களுக்கு உறுதியும் அளித்துள்ளதாக கூறினார்.

ஆனால், இதை ஏற்க என்ஆர்எஃப் குழு மறுத்து விட்டது. "தலிபானின் அறிவிப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். அவர்களின் அறிவிப்பு உண்மையல்ல," என்று என்ஆர்எஃப் செய்தித் தொடர்பாளர் அலி மைசாம் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, பஞ்ஷீர் மாகாண ஆளுநர் மாளிகை வளாகத்தின் நுழைவு வாயிலில் தலிபான் இருப்பதாகக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை எப்போது எடுக்கப்பட்டன என்பதை பிபிசியால் சுயாதீனமாக இன்னும் உறுதிப்படுத்த இயலவில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாரான என்ஆர்எஃப்
முன்னதாக, தலிபான்களுக்கு எதிராகப் போராடி வரும் தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அஹமத் மசூத், தாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.

மத குருக்கள் முன்வைத்த யோசனையின் அடிப்படையில், தாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், தாக்குதலை தலிபான்கள் நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில்தான், ஃபேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம், அஹமத் மசூத் சமாதான பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுத்திருந்தார். ஆனால், அதற்கு தலிபான்களிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.

மேற்கு நாடுகளின் படைகள் மற்றும் நேட்டோ படைகள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய சில வாரங்களிலேயே, ஆப்கானிஸ்தானின் எல்லா நகரங்களையும் கைப்பற்றி விட்டது தலிபான்.

ஆனால் தலைநகர் காபூலுக்கு அருகிலேயே இருக்கும் பஞ்ஷீர் என்கிற மாகாணம் மட்டும், இப்போது வரை தலிபான்களுக்கு அடிபணியாமல் ஆப்கன் தேசிய எதிர்ப்பு முன்னணி என்கிற அமைப்பு ஆயுதமேந்தி தலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிய போதும் இந்துகுஷ் மலைத் தொடருக்கு அருகில் உள்ள பஞ்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை இருந்து வந்தது.  

கரடு முரடான நில அமைப்பைக் கொண்ட சுமார் 2 லட்சம் பேர் வரை வாழும் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு மாகாணம் கடந்த பல ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறது. ரஷ்யா, தலிபான் என எவருக்கும் இம்மாகாணம் அடிபணிந்ததில்லை.

இந்த மாகாணப் படையில் முன்னாள் ஆப்கன் அரசுப் படை வீரர்கள், உள்ளூர் ஆயுத மேந்திய வீரர்களும் இருக்கின்றனர். இப்படையை அஹ்மத் மசூத் தலைமை தாங்கி வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

1980 களில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகவும், 1990 களில் தாலிபன்களுக்கு எதிராகவும் இவரது தந்தை அஹ்மத் ஷா மசூத் போரிட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

ஐ.நா பிரதிநிதி - தலிபான் தலைவர் சந்திப்பு
இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகள் துறையின் தலைவர் மார்டின் க்ரிஃபித் காபூல் நகரத்தில் தலிபான் தலைவர்களைச் சந்தித்து, அனைத்து மக்களையும் குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள், சிறுபான்மையினரை பாதுகாக்குமாறு வலியுறுத்தினார்.

தலிபான் இயக்கத்தை நிறுவியர்களில் ஒருவர் மற்றும் ஆப்கானிஸ்தானின் ஆட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ள முல்லா அப்துல் கனி பராதர் உடன் மார்டின் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான உதவிகள் தேவையான மக்களுக்கு கிடைக்கவும், மனிதாபிமான உதவிகளைச் செய்யும் ஆண் மற்றும் பெண் சேவகர்கள் அனைவரும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என தலிபான் தலைவர்கள் உறுதியளித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கணக்குப்படி, ஆப்கனில் சுமார் 1.8 கோடி பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவை.

No comments:

Post a Comment