(எம்.எப்.எம்.பஸீர்)
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உள்ளிட்ட குழுவினர் வெலிக்கடை, அனுராதபுரம் ஆகிய சிறைகளுக்கு சென்று முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக கூறபப்டும் சம்பவங்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்கள மட்டத்திலும் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கடந்த 12 ஆம் திகதி வெலிக்கடை, அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பூரணமாக இவ்விசாரணையில் ஆராயப்படும் எனவும், இதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் (விநியோகம்) சுனில் கொடித்துவக்கு எனும் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இரு சிறைச்சாலைகளிலும் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் அவர் பூரண விசாரணை ஒன்றினை முன்னெடுத்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பார் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment