தலிபான்களுடன் மத்தியஸ்தம் செய்யும் கத்தார், துருக்கி : மத்திய கிழக்கில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? - News View

About Us

About Us

Breaking

Friday, September 3, 2021

தலிபான்களுடன் மத்தியஸ்தம் செய்யும் கத்தார், துருக்கி : மத்திய கிழக்கில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

தலிபான்கள் மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை கொண்டாடியது. வெற்றிப் பேரணி நடத்தியது. ஆனால் சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் தலிபான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கான் மக்கள் பலர் நிச்சயமற்ற எதிர்காலத்தை சந்திக்கின்றனர். உலகின் வலுவான நாடுகள் தற்போது தலிபான்களின் மீது தங்களின் ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருகின்றன. இந்த முயற்சியில் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் இரண்டு முக்கிய மத்தியஸ்தர்கள் என்ற பொறுப்பை கையில் எடுத்துள்ளன. அது கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தான். இரு நாடுகளும் தலிபான்களின் சமீபத்திய வரலாற்றிலிருந்து ஆதாயம் தேட பார்க்கின்றன. சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைக்கின்றன. இரு நாடுகளுமே தங்களின் எதிரிகளை மேலும் தொலைதூரத்துக்கு அனுப்பும் ஒரு வாய்ப்பை உருவாக்க காத்திருக்கின்றன. வளைகுடாவில் ஒரு சிறிய எரிவாயு ஆற்றல் நிறைந்த நாடான கத்தார் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பிய பல நாடுகளுக்கு ஆதாரமாக இருந்தது."எந்த ஒரு நாடும் கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவரின் துணையில்லாமல் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற முயற்சியில் ஈடுபட முடியவில்லை" என்கிறார் சர்வதேச நெருக்கடி குறித்து கண்காணிக்கும் ஆய்வுக் கழகம் ஒன்றின் மூத்த ஆலோசகர் டினா எஸ்ஃபேண்டியாரி.

"ஆப்கானிஸ்தானும் தலிபானும் கத்தாருக்கு ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றிதான். தலிபான்களுடன் மத்தியஸ்தம் செய்வதால் மட்டும் இந்த வெற்றி அல்ல. இந்த பிரச்சினையில் சிக்கியுள்ள மேற்கத்திய நாடுகளும் கத்தாரை முக்கியமானதொரு நாடாக பார்க்கும்" என்கிறார் டினா.

கத்தாரின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், லால்வா அல்கடேர் உலக நாடுகள் கத்தார் குறித்து பெருமையாக ட்விட்டரில் இட்ட பதிவுகளை வரிசையாக ரீட்வீட் செய்துள்ளார். தலிபான் விவகாரத்தில் கத்தார் ஒரு நம்பகமான மத்தியஸ்தராக உள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.

தலிபானுடன் மத்தியஸ்தம் செய்வதில் ஆபத்துக்களும் நிறைந்துள்ளன. மத்திய கிழக்கில் உள்ள வேறுபாடுகளை அது அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஏனென்றால் எகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பதற்றத்தை உருவாக்கும் இஸ்லாமியவாத இயக்கங்களுடன் துருக்கி மற்றும் கத்தார் நெருக்கமாக இருக்கின்றன. எகிப்து உள்ளிட்ட நாடுகள் இந்த இயக்கங்களை ஒரு அச்சுறுத்தலாகத்தான் பார்க்கின்றன.

கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உலகின் பிற நாடுகளுக்காக தலிபான்களுடன் மத்தியஸ்தம் செய்து தெற்காசியாவில் வலுவானால் அது மத்திய கிழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தலிபான்கள் ஒரு புதுப்பிக்கப்பட்ட இஸ்லாமியவாத கொள்கைகளை கொண்டு ஆட்சி செய்வார்கள். இருப்பினும் அது இப்போதைக்கு தெற்காசியாவிற்குள் அடங்கியிருக்கும் என்கிறார் டினா.

"இது ஆப்கானிஸ்தானுக்கானதுதான் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு இல்லை. கடந்த 10 வருடங்களாக அந்த பிராந்தியம் இஸ்லாமியவாத குழுக்கள் மற்றும் இஸ்லாமியவாதத்தை பின்பற்றாத குழுக்களுக்கு மத்தியில் சிக்கி தவிக்கிறது." என்கிறார் அவர்.

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை
தலிபான்கள் 1990 களில் அதிகாரத்தில் இருந்தபோது பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தலிபான்களுடன் உறவை பேணின.

அதன் பின் அமெரிக்காவில் நடைபெற்ற 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தலிபான்களுடனான உறவை துண்டித்தன. சவூதி அரேபியாவில் உள்ள தனிநபர்களிடமிருந்து தலிபான்களுக்கு நிதியுதவி சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

தலிபான்களுக்கு அதிகாரபூர்வமாக நிதி ஏதும் செல்லவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோன்று தனிப்பட்ட ரீதியில் பணம் செல்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகள் இருப்பதை அமெரிக்கர்கள் வெறுப்பது அதிகமாக தொடங்கிய காலத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கான வாய்ப்பை பிற நாடுகளுக்கு அது வழங்கியது.

கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு தலிபான்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு பல்வேறு விதத்தில் கிடைத்தது.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்பிய போது தலிபான் தலைவர்களுடனான அமைதி பேச்சுவார்தைக்கான மத்தியஸ்த முயற்சியில் கத்தார் 2011 ஆம் ஆண்டிலிருந்து ஈடுபட்டது.

தோஹாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அது ஒரு சர்ச்சையான மற்றும் வெற்றி தோல்வி கலந்த ஒரு முயற்சி. அதன் பிறகு தலிபான்களின் கொடி தோஹாவின் புறநகர் பகுதிகளில் பறப்பது பலரை புண்படுத்தியது. 

கத்தாரை பொறுத்த வரை மூன்று தசாப்த காலம் தாங்கள் காத்திருந்த தன்னாட்சி வெளியுறவு கொள்கையை உருவாக்க அது உதவியது. ஈரான் மற்றும் சவூதி அரேபியாவுடன் பிராந்திய எல்லைகளை கொண்டுள்ள ஒரு நாடுக்கு இது முக்கியமான ஒன்று.

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டும் தோஹா ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் தலிபான்களால் கையெழுத்திடப்பட்டது.

'எச்சரிக்கை கலந்த நம்பிக்கை'
ஆப்கானிஸ்தானில் துருக்கி வலுவான வரலாற்று மற்றும் இன ரீதியான தொடர்பை கொண்டுள்ளது. போரில் ஈடுபடாத நேட்டோ உறுப்பினரான ஒரே ஒரு முஸ்லிம் நாடாக துருக்கி களத்தில் இருந்தது.

சில தலிபான்களுடனான உளவுப் பார்க்கும் வேலையை துருக்கி ஏற்படுத்தி கொண்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். துருக்கி பாகிஸ்தானின் கூட்டாளி நாடாகவும் உள்ளது.

கடந்த வாரம் காபூல் விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டு கொண்டிருந்த வேளையில் துருக்கிய அதிகாரிகள் தலிபான்களுடன் மூன்று மணி நேர பேச்சுவார்த்தையை நடத்தினர். அதில் எதிர்காலத்தில் காபூல் விமான நிலையம் எவ்வாறு இயக்கப்படும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அங்கு துருக்கியப் படைகள் ஆறு வருட காலம் காவலுக்கு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிற வெளிநாட்டுப் படைகளுடன் ஆப்கானிஸ்தானை விட்டு துருக்கி ராணுவமும் வெளியேற வேண்டும் என தலிபான்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒரு நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதி என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தலிபான்களுடன் தொடர்பில் இருப்பது குறித்து சர்ச்சை
தலிபான் தலைவர்களிடமிருந்து வந்த செய்தியை "எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையுடன்" பார்த்ததாக அந்நாட்டின் ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.

தலிபான்களுடன் தொடர்பில் இருப்பது குறித்து விமர்சனங்கள் எழுவது குறித்து கேட்டபோது யாருடன் பேச வேண்டும் என யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், இது ராஜீய நடைமுறை எனவும் எர்துவான் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் ஒற்றுமைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துருக்கி வழங்க தயார் என்று தெரிவித்த அவர், இருப்பினும் துருக்கி எச்சரிக்கையான பாதையில் செல்லும் என்றும் தெரிவித்தார்.

தலிபான்களுடன் தொடர்பில் இருப்பது துருக்கிக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது என இஸ்தான்புல்லில் உள்ள அல்டின்பாஸ் பல்கலைக்கழகத்தின் ஆப்கன் நாட்டின் உறவுகள் குறித்த நிபுணர் பேராசிரியர் அகமத் காசிம் ஹான் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க தலிபான்களுக்கு சர்வதேச உதவி மற்றும் முதலீடுகள் தேவை. தற்போதைய சூழலில் தங்கள் அரசின் ஊழியர்களுக்கு கூட அவர்களால் ஊதியம் கொடுக்க இயலவில்லை என அகமது காசிம் பிபிசியிடம் தெரிவித்தார்.

ரஷ்யா மற்றும் சீனாவை காட்டிலும் துருக்கி ஒரு நம்பகமான மத்தியஸ்தராக காட்டிக் கொள்ள முயற்சிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆபத்தும் நிறைந்துள்ளது
பல நாடுகளும் தலிபான்களுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தன. குறிப்பாக தோஹாவின் மூலம். ஆனால் ஆபத்துகள் சூழ்ந்திருந்தாலும் களத்தில் தலிபான்களுடனான உறவை வலுப்படுத்தும் இடத்தில் துருக்கி உள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான உறவை வலுப்படுத்தினால் அது எர்துவான் தனது ஏகே கட்சிக்கான ஆதரவை அதிகரிக்கும் வகையில் வெளியுறவுக் கொள்கையை விரிவுப்படுத்த உதவும் என்கிறார் அகமது காசிம்.

இருப்பினும் தலிபான்கள் கொடூரமான ஷரியா சட்டங்களால் ஆட்சி செய்தால் துருக்கி உட்பட எந்த நாடும் தலிபான்களுடன் உறவு வைத்து கொள்ள விரும்பாது என்கிறார் அகமது.

அமெரிக்கா மற்றும் நேட்டோவுடனான மோசமான உறவுகளை துருக்கி மேம்படுத்த பல காரணங்களும் உண்டு. ஆப்கன் அகதிகள் துருக்கிக்கு வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் துருக்கி ஈடுபட்டு வருகிறது.

அதேபோன்று கத்தார் மத்தியஸ்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது வளைகுடாவில் உள்ள அதிர்வலைகளை குறைக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

மத்திய கிழக்கில் நடைபெற்ற பல்வேறு சண்டைகளுக்கு கத்தார் மத்தியஸ்தம் செய்து வைத்துள்ளது. ஆனால் அரபு புரட்சிக்கு பிறகு கத்தார் இஸ்லாமியவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் எதிரி நாடுகள் தெரிவித்தன. 

2017 ஆம் ஆண்டு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கத்தாருடனான உறவை துண்டித்தன. கத்தார் ஈரானுக்கு நெருக்கமாக செயல்பட்டு தனது அரசு ஊடகமான அல் ஜசீரா மூலம் பதற்றத்தை அதிகரிப்பதாக இந்த நாடுகள் தெரிவித்தன ஆனால் கத்தார் அதனை மறுத்தது.

தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள நிலையற்ற சூழலால் கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் பிற நாடுகளின் சார்பாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. சீனா மற்றும் ரஷ்யா காபூலில் ஆதிக்கம் செலுத்த போட்டியிடும்.

துருக்கி மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமாக இருப்பதால் மனித உரிமைகள் சார்ந்த விஷயங்களில் அது அதிக அழுத்தத்தை எதிர்கொள்ளும் என்கிறார் அகமது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதன் அதிர்வுகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன. காலம் செல்ல செல்லத்தான் அது மில்லியன் கணக்கான ஆப்கன் மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியும்.

No comments:

Post a Comment