(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
நிர்ணய விலையை விட அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான தண்டப்பணம் இன்று முதல் (நேற்று) ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்படுகின்றது. நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கத்திலேயே இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் லசன்த்த அழகியவண்ண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தில் விலை நிர்ணய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் இதுவரை இருந்து வந்த தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
அதன் பிரகாரம் 10 ஆயிரம் ரூபாவாக இருந்தத் தொகை ஒரு இலட்சம் ரூபா வரையும் ஒரு இலட்சம் ரூபா 10 இலட்சம் ரூபா வரையும் அதிகரிக்கப்பட்டிருகின்றது. இந்த தொகை 20 இலட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
நாட்டின் தற்போதைய நிலைமையில் ஒரு சில வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களின் விலையை பாரியளவில் அதிகரித்து விற்பனை செய்துவருகின்றனர். இவ்வாறான வியாபாரிகளுக்கு தண்டப்பணமாக இருக்கும் தொகை மோதுமானதாக இல்லை. அதனால் அவர்கள் தொடர்ந்து அந்த குற்றத்தை செய்துவருபவர்களாக இருந்தனர்.
அதனால் இதனை தடுத்து நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கிலே தண்டப் பணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். நாடில் 90 வீதமானவர்கள் நல்லவர்கள் என்றாலும் 10 வீதமானவர்களின் மோசமான நடவடிக்கை காரணமாகவே இந்த தீர்மானத்தை நாங்கள் எடுத்தோம்.
மேலும் நாட்டில் ஒரு சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.
இந்த பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அந்த பொருட்களுக்கு விலை அதிகரிக்குமாறு கோரி வருகின்றனர். உலக சந்தையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே அவர்களும் விலை அதிகரிப்பை கோருகின்றனர். அதனால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நாளைய தினம் (இன்று) வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவுடன் கலந்துரையாட இருக்கின்றோம்.
மேலும் நுகர்வோர் அதிகார சபையில் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்திருப்பது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. அவரும் சில குற்றச்சாட்டுக்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.
குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு நாங்கள் சில நிபந்தனைகளை விதித்திருக்கின்றோம். அதில் சில விடயங்கள் நாட்டுக்கு பாதிப்பு என தெரிவித்திருக்கின்றார்.
நாட்டுக்கு பாதிப்பான எந்த நிபந்தனையும் இல்லை. அத்துடன் அரசியல் அழுத்தங்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் எந்த வகையான அழுத்தங்களையும் அவருக்கு பிரயோகிக்கவில்லை என்றார்.
No comments:
Post a Comment