ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவை நோக்கி ஏவுகணை தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் மற்றும் மூன்று ட்ரோன்களை தாங்கள் இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தம்மான் நகரத்தில் இவற்றில் ஓர் ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டது. இதனால் சிதறி விழுந்த பாகங்கள் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் காயமடைந்ததாகவும், சில கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் சவூதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏமனில் இருந்து எல்லை தாண்டிய தாக்குதல்களை அடிக்கடி நடத்தும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு வசதிகளை இலக்கு வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள ஜிசான் மற்றும் நஜ்ரான் ஆகிய மாகாணங்களில் உள்ள கச்சா எண்ணெய் வசதிகளை இலக்கு வைத்து தாக்கியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து சவூதி அரேபியாவிலிருந்து உடனடியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

2019ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் இரண்டு எண்ணெய் வயல்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.

இதனால் சவூதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. அப்பொழுது ஒரு நாளைக்கு 57 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தி குறைந்தது. இது சவூதி அரேபியாவின் அப்போதைய உற்பத்தி திறனில் கிட்டத்தட்ட பாதி அளவு ஆகும்.

ஏமன் தலைநகர் சனாவை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பின்னர் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு ஆதரவாக ஏமன் போரில் பங்கேற்க 2015 ஆம் ஆண்டு சவூதி அரேபியா ஏமனில் தலையிட்டது.

ஏமனில் நடக்கும் இந்த உள்நாட்டுப் போர்தான் உலகிலேயே மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடி என்று ஐக்கிய நாடுகள் மன்றம் கூறியது.

மார்ச் 2020 வரை குறைந்த பட்சம் 7,700 குடிமக்கள் ஏமனில் இறந்துள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான மரணங்கள் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியின் வான் தாக்குதலின் காரணமாக நிகழ்ந்தவை.

எனினும் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதை விட மிகவும் அதிகமாக இருக்கும் என்று கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் இருந்து இயங்கும் ஆர்ம்ட் கான்ப்ளிக்ட் லொக்கேஷன் அண்ட் ஈவண்ட் டேட்டா ப்ராஜெக்ட் (Armed Conflict Location and Event Data Project) என்னும் திட்டம் மூலம் திரட்டப்பட்ட தரவுகளில் அக்டோபர் 2019 முதல் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த போரின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் தாக்குதலின் போது நேரடியாக மரணமடைந்த 12,000 ஏமன் குடிமக்களும் அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment