லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முறைப்பாடுகள் இல்லை - கிடைக்கப் பெறின் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தயார் : பொலிஸ் தலைமையகம் - News View

Breaking

Wednesday, September 15, 2021

லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முறைப்பாடுகள் இல்லை - கிடைக்கப் பெறின் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தயார் : பொலிஸ் தலைமையகம்

(எம்.எப்.எம்.பஸீர்)

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்த தொடர்பில் பொலிஸாருக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி வெலிக்கடை, அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அச்சிறைச்சாலைகள் அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இராஜாங்க அமைச்சருக்கு எதிராக எந்த முறைப்பாடுகளும் இன்று நண்பகல் 12.00 மணியாகும் போதும் பதிவாகியிருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்நிலையில் சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில், முறைப்பாடுகள் இன்றி விசாரணைகளை முன்னெடுப்பது சிரமம் எனவும், முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப் பெறின் அம்முறைப்பாட்டுக்கு அமைய தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று நண்பகல் வரை, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் அமைச்சில் கடமையாற்றி இருந்த நிலையில், அவருக்கு எதிரான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்காமல் இருக்கலாம் என சுட்டிக்காட்டிய பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர், அவர் இராஜினாமா செய்துள்ள பின்னணியில் சில வேளைகளில் இனிமேல் முறைப்பாடு கிடைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment