நாட்டில் சகல வர்த்தக நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதியளிக்கக் கூடிய நிலைமை இன்னும் ஏற்படவில்லை - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

நாட்டில் சகல வர்த்தக நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதியளிக்கக் கூடிய நிலைமை இன்னும் ஏற்படவில்லை - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் சகல வர்த்தக நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதியளிக்கக் கூடிய நிலைமை இன்னும் ஏற்படவில்லை. காரணம் இன்றும் நாட்டில் நாளாந்தம் சுமார் 1700 தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமையே காணப்படுகிறது. இந்த நிலைமை மேலும் குறைவடையும் வரை வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் திறப்பது பொறுத்தமானதாக இருக்காது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சியை அவதானிக்க முடிகிறது. எவ்வாறிருப்பினும் இந்த வீழ்ச்சியில் மேலும் மாற்றத்தை அவதானிக்கும் வரை மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

தற்போது பின்பற்றுகின்ற சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றினால் தொற்றாளர் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியை அடைய முடியும். அத்தோடு இவ்வாறான வீழ்ச்சியை தொடர்ந்தும் பேணுவது எமது நடத்தைகளிலேயே தங்கியுள்ளது.

இம்முறை நாடு திறக்கப்பட்டாலும் மீண்டும் மூடக் கூடிய நிலைமை ஏற்படக் கூடாது என்பதே எமது இலக்காகக் காணப்பட வேண்டும். மாறாக மீண்டுமொருமுறை தொற்று பரவல் தீவிரமடைந்து நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது.

தற்போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி இனங்காணப்பட்ட போதிலும், நாளாந்தம் சுமார் 1700 தொற்றாளர்கள் பதிவாகின்றனர்.

கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் இந்த நிலைமை காணப்படவில்லை. எனவே மீண்டும் ஒக்டோபருக்கு முன்னர் காணப்பட்ட நிலைமைக்கு செல்லும் வரையில் சகல கடைகளையும் மீள திறப்பது பொறுத்தமான தீர்மானமாக இருக்காது என்றார்.

No comments:

Post a Comment