(எம்.ஆர்.எம்.வசீம்)
சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் என்பதற்காக லொஹான் ரத்வத்தைக்கு விசேட வரப்பிரசாதங்கள் எதுவும் இல்லை. அவரை கைது செய்வதற்கு பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் நீதியான விசாரணை இடம்பெறும் என்பதில் சந்தேகம் என ஐக்கிய சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர் சட்டத்தரணி அதுல எஸ். ரணகல தெரிவித்தார்.
வெலிகடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்படாமல் இருப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வெலிகடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தவறு செய்திருப்பது வெளிப்பட்டிருக்கின்றது. லொஹான் ரத்வத்த தவறை ஏற்றுக் கொண்டே பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். அவரின் நடவடிக்கையில் தண்டனைச் சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கின்றன.
துப்பாக்கி பயன்படுத்தி இருப்பது தொடர்பில் தவறு இடம்பெற்றிருக்கின்றது. அதேபோன்று அரச ஊழியர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தி இருப்பது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று குடி போதையில் செயற்பட்டமை தொடர்பில் வேறு சட்டம் இருக்கின்றது. சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சட்டத்தையும் மீறி இருக்கின்றார். சாதாரண குற்றம் செய்த நபர்களையும் பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துகின்றார்கள். ஆனால் பல சட்ட மீறல்களை மேற்கொண்ட இந்த நபரை கைதுசெய்வதற்கு பொலிஸால் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான விசாரணை நீதியாக இடம்பெறுவதாக இருந்தால், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும்.
அவர் சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் என்பதற்காக அவருக்கு விசேட வரப்பிரசாதங்கள் இல்லை. அவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று இருப்பதற்காக கண்டவர்களுக்கெல்லாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவோ பொதுமக்களை அச்சுறுத்தவொ முடியாது. அனுமதி அளிக்கப்பட்ட துப்பாக்கிகள் மூலம் அதனை செய்ய முயடியாது என்றார்.
No comments:
Post a Comment