மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடிகள் குறித்த விசாரணைகளின் போது அஜித் நிவாட் கப்ரால் தொடர்பான பல்வேறு தகவல்களும் வெளியாகியிருக்கின்ற சூழ்நிலையில், அரசாங்கம் அவரையே மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்திருக்கின்றது. அவர் தனது மோசடி தொடர்பான இரகசியங்கள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நிதிச் சபையின் செயலாளராக இருந்த தவுலகலவை அந்தப் பதவியிலிருந்து நீக்கியிருக்கின்றார். இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக கொரோனா வைரஸை விடவும் மிகப்பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய 'பொருளாதார வைரஸாக' ஆளுந்தரப்பு எழுச்சியடைந்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது: கடந்த காலத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடிகள் குறித்த விசாரணைகளின்போது அஜித் நிவாட் கப்ரால் தொடர்பான பல்வேறு தகவல்களும் வெளியாகியிருக்கின்ற சூழ்நிலையில், அதே நபர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
அவர் தனது இரகசியங்கள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நிதிச் சபையின் செயலாளராக இருந்த தவுலகலவை அந்தப் பதவியிலிருந்து நீக்கினார் என்பதும் அனைவரும் அறிந்த விடயமாகும்.
எனவே இந்தப் பிணைமுறி விவகாரம் தொடர்பில் மாத்திரமன்றி ஹெய்ஜிங் ஒப்பந்தம், க்ரீக் ஒப்பந்தம் என்பன தொடர்பிலும் தற்போதைய ஆளுநர் ஏற்கனவே குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்தார்.
இவையனைத்தையும் விட 'நாணயத் தாள்களை அச்சிடுவதால் பண வீக்கம் ஏற்படாது' என்ற கருத்தை முன்வைத்த நபரே இப்போது மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை வகிக்கின்றார்.
தற்போது கொரோனா வைரஸை விடவும் மிகவும் பாரதூரமான வைரஸாக இருக்கக்கூடிய 'ராஜபக்ஷ வைரஸிற்கு' பயந்து பலரும் நாட்டைவிட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
ஆனால் அந்த 'ராஜபக்ஷ வைரஸை' முழுமையாகத் தோற்கடித்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நாட்டு மக்களிடம் வலியுறுத்துகின்றேன் என்றார்.
No comments:
Post a Comment