ஜனநாயகத்தை வலுப்படுத்தக் கூடிய வகையிலான கொள்கை ரீதியான மாற்றங்களின் ஊடாக சர்வதேசத்தின் நன்மதிப்பை வென்றெடுக்க முடியும் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

ஜனநாயகத்தை வலுப்படுத்தக் கூடிய வகையிலான கொள்கை ரீதியான மாற்றங்களின் ஊடாக சர்வதேசத்தின் நன்மதிப்பை வென்றெடுக்க முடியும் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரிதும் ஆறுதலளிக்கின்றன. இலங்கையைப் பற்றிய பலதரப்பட்ட நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளிப்பதற்கு இது ஓர் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய, ஜனநாயகத்தை வலுப்படுத்தக் கூடிய வகையிலான கொள்கை ரீதியான மாற்றங்களின் ஊடாக சர்வதேசத்தின் நன்மதிப்பை வென்றெடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது குறித்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் கரு ஜயசூரியவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கொவிட்-19 தொற்றுநோயால் இறந்த அனைத்து குடும்பங்களுக்கும் முதலில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த வார இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி நாட்டில் ஜனநாயகத்தை எப்போதும் உறுதி செய்வதாகத் தெரிவித்திருந்தார். அது மிகவும் வரவேற்கத்தக்க நல்ல விடயமாகும்.

தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் வெற்றிகரமான கலந்துரையாடல்களை நடத்துகிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்த அறிக்கையை வழங்குவதற்கென முன்னாள் பிரதம நீதியரசர் தலைமையில் விசேட குழுவொன்றை சரியான தருணத்தில் நியமித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால் அதன் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமான முறையில் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. அது உரியவாறு பூர்த்தியடையும் பட்சத்திலேயே உலக நாடுகளின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். எனவே இது குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.

அதேவேளை பிரதமர் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை சந்திப்பது மிகவும் முக்கியமானதாகும். இத்தகைய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது இதுவரை காலமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும்.

அத்தோடு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அவசியமற்றது என்பது உள்ளடங்கலாக சிலரால் முன்வைக்கப்படும் முட்டாள்தனமான யோசனைகளுக்கு செவிசாய்க்காமல் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.

எமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற கட்டமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக நிதியமைச்சர் அவரது பாராளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.

நாடு என்ற வகையில் ஜனநாயக ரீதியான கொள்கைகளைப் பின்பற்றுவதன் ஊடாக சர்வதேசத்தின் நன்மதிப்பை வென்றெடுக்க முடியும் என்பதுடன் எந்தவொரு அதிகாரத்தரப்புடனும் கைகோர்க்காமல் நடுநிலையாக நின்று முன்னேறிச்செல்ல முடியும்.

அண்மைய காலங்களில் சர்வதேச கட்டமைப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட பலதரப்பட்ட தீர்மானங்களின்போதும் இலங்கைக்கு எதிராக அதிகளவான வாக்குகள் பதிவாகின. இருப்பினும் அவ்வாறு எதிராக வாக்களித்த நாடுகள், இலங்கையைப் பெரிதும் விரும்புவதாகவும், கொள்கை ரீதியான காரணங்களினாலேயே இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலையேற்பட்டதாகவும் விளக்கமளித்தன.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியதன் பின்னரான காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் நாம் எமது கருத்துக்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி நாட்டில் 82 சதவீதமான மக்கள் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிராகரித்துள்ளமையினை வெளிப்படுத்தியுள்ளன.

அரசியல் ரீதியான பழிவாங்கல் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட உபாலி அபேரத்ன ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் ஒட்டு மொத்த நாட்டிற்கும் குறிப்பாக நீதித்துறைக்கும் அவமரியாதையைத் தேடித்தரும் வகையில் அமைந்ததுடன் உலகின் வேறெந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இடம்பெறாத விடயமாகவுமே நோக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனை, அவரது நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் நாடொன்றில் நடைபெறும் தேர்தல்கள் சுயாதீனமானவையாகவும் நியாயமானவையாகவும் அமைய வேண்டும். இது குறித்து நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்ததுடன் அந்தச் சுதந்திரம் இலங்கையர்களுக்குக் கிடைக்கப் பெறாமை தொடர்பிலும் குறிப்பிட்டோம்.

பல்வேறு சுயாதீன ஆணைக்குழுக்களில் அரசியல் ரீதியான நியமனங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தோம். எனவே எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இருவரின் ஒப்புதலுடன் இதனைச் சரி செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். அவ்வாறில்லா விட்டால் சுயாதீன ஆணைக்குழுக்களால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதுடன் அதன் செயற்பாடுகளை எம்மால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நாட்டின் மேம்பாட்டை முன்னிறுத்தியே செயற்பட்டு வருகின்றது. எனவே இதுவோர் அரசியல் கட்சியல்ல என்பதையும் அனைவரும் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும்.

எமது இயக்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் ஊடாக கொள்கை ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment