ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆளுகை - மெளனம் கலைந்த சவூதி அரேபியா - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆளுகை - மெளனம் கலைந்த சவூதி அரேபியா

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசு குறித்து முதல் முறையாக சவூதி  அரேபியா கருத்து தெரிவித்துள்ளது.

"தலிபான்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பணியாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று சவூதி  அரேபியாவின் வெளியுறவு அமைச்சரும், இளவரசருமான ஃபைசல் பின் ஃபர்ஹான் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் பற்றிய ஒரு மெய்நிகர் கூட்டத்தில் பேசிய அவர், ஆப்கானிஸ்தான் தொடர்பான தமது அரசின் நிலையை தெளிவுபடுத்தினார்.

"இடைக்கால அரசு சரியான திசையில் செயல்படும் என்றும் மக்களை வன்முறை மற்றும் தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கும் என்றும் சவூதி அரேபியா நம்புகிறது ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று சவூதி அரேபியா நம்புகிறது," என்று அவர் கூறினார்.

தமது நாடு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்யும் என்று இளவரசர் ஃபைசல் கூறியதாக சவூதி பிரஸ் என்ற அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்களுடன் தமது நாடு நிற்கும். ஆப்கானிஸ்தானை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு செளதி அரேபியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று இளவரசர் பைசல் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசில் அங்கம் வகிப்பது யார் என்ற விவரத்தை தலிபான் செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது. அந்த அரசில், முல்லா முகம்மது ஹசன் அகுந்த் பிரதமராகவும், அப்துல் கனீ பராதர் துணை பிரதமராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபியா மற்றும் தலிபான்
இதற்கு முன் 1996 முதல் 2001 வரை, ஆப்கானிஸ்தானை தலிபான் ஆண்டுள்ளது. அந்த காலகட்டத்தில், சவூதி அரேபியா, பாகிஸ்தான் ,ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய மூன்று நாடுகளும், ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் சட்டபூர்வமான தன்மையை ஏற்றுக் கொண்டன. இந்த காலகட்டத்தில், ஒசாமா பின்லேடனின் தலைமையில் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பை தலிபான் வளர அனுமதித்தது.

இந்த அமைப்பு 2001 இல் அமெரிக்காவில் நடந்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பு என்று கருதப்படுகிறது, இந்த தாக்குதல்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் தரைமட்டமானதில் சுமார் 3,000 பேர் இறந்தனர்.

இன்று தலிபான்கள் தங்களை "ஆப்கானிஸ்தானின் உண்மையான இஸ்லாமிய ஆட்சியாளராக" பார்க்கிறார்கள், சர்வதேச அளவில் தங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் தலிபான் விரும்புகிறது.

ஒசாமா பின்லேடன் மற்றும் சவூதி அரேபியா
ஒசாமா பின்லேடனின் சொந்த நாடு சவூதி அரேபியா. அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 2018 இல் அவரது தாயார் தனது மகனைப் பற்றி முதன்முறையாக பகிரங்கமாகப் பேசினார்.

சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள தனது குடும்ப வீட்டில் பிரிட்டிஷ் செய்தித்தாள் 'தி கார்டியன்' க்கு ஆலியா கானெம் பேட்டி அளித்தார்.

தனது மகன் குழந்தைப் பருவம் முதல் கூச்ச சுபாவமுள்ள, "நல்ல குழந்தை" யாக இருந்தார் என்று ஆலியா அப்போது கூறினார். ஆனால் பல்கலைக்கழகத்தில் "மூளைச்சலவை" செய்யப்பட்டு அவரது மனம் மாற்றப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

பின்லேடனை 1999 இல் ஆப்கானிஸ்தானில் கடைசியாக பார்த்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இது 9/11 சம்பவத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயமாகும். ஆரம்பத்தில், அவர் சோவியத் படைகளுக்கு எதிராக போராட ஆப்கானிஸ்தானுக்கு வந்தார். ஆனால் 1999 வாக்கில், 'சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி' என்ற ஒரு உலகளாவிய அடையாளமாக அவர் மாறினார்.

ஒசாமாவின் தாயார் என்ன சொன்னார்?
தனது மகன் ஜிஹாதி ஆக மாறியதை அறிந்ததும் அவரது மனம் எப்படி இருந்தது என்று ஆலியாவிடம் கேட்கப்பட்டது.

"நான் மிகவும் வருத்தப்பட்டேன். இது நடப்பதை நான் எப்போதுமே விரும்பியதில்லை. அவர் எப்படி எல்லாவற்றையும் அழிக்க முடியும்?"என்று அவர் பதிலளித்தார்.

படிக்கும் போது தனது மகன் 'முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு' உடன் தொடர்பில் வந்தார் என்றும் அந்த நேரத்தில் அது ஒரு சமய வழிபாட்டு முறையாக இருந்ததாகவும், ஆலியா மேலும் கூறினார்.

பின்லேடனின் குடும்பம் சவூதி அரேபியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாகும். இந்தக் குடும்பம் கட்டுமானத் தொழிலில் செல்வத்தை ஈட்டியது.

பின்லேடனின் தந்தை முகம்மது பின் அவாத் பின்லேடன், ஒசாமா பிறந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆலியா கானெமை விவாகரத்து செய்தார். அவாத் பின்லேடனுக்கு 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.

9/11 தாக்குதல்களுக்குப் பிறகு சவூதி அரசால் தாங்கள் விசாரிக்கப்பட்டதாகவும், தங்கள் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் குடும்பம் கூறுகிறது .

அல் கொய்தாவின் முன்னாள் தலைவர் ஒதுக்கப்பட்டவர், அரசாங்க ஏஜெண்ட் அல்ல என்பதைக் காட்ட உதவும் என்பதால் சவூதி அரேபியாவின் நிர்வாகம் ஆலியா கானேமுடன் தன்னை பேச அனுமதித்தது என்று தாம் நினைப்பதாக, பத்திரிகையாளர் மார்ட்டின் சுலோவ் குறிப்பிட்டார்.

இந்த நேர்காணலின் போது பின்லேடனின் இரண்டு சகோதரர்கள் ஹசன் மற்றும் அகமது ஆகியோரும் உடனிருந்தனர். 9/11 தாக்குதலில் ஒசாமாவின் பங்கு பற்றி அறிந்ததும் தாங்கள் அதிர்ச்சியடைந்ததாக அவர்கள் கூறினர்.

"வீட்டின் ஒவ்வொரு சிறிய அல்லது பெரிய உறுப்பினரும் அவர் குறித்து வெட்கப்பட்டனர். நாங்கள் அனைவரும் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உலகில் எங்கிருந்தாலும் சவூதி திரும்பினர். "என்று அகமது நினைவு கூர்ந்தார்.

9/11 தாக்குதல்கள் நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் ஒஸாமா பின்லேடனை விட அவரைச்சுற்றி இருந்தவர்கள் தான் அந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பு என்று தனது தாய் இப்போதும் கருதுவதாக அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment