வெள்ளவத்தையில் சோகம் ! தாய் மரணித்ததால் பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை - News View

Breaking

Tuesday, September 7, 2021

வெள்ளவத்தையில் சோகம் ! தாய் மரணித்ததால் பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை

(எம்.எப்.எம்.பஸீர்)

தனது தாய் மரணித்த செய்தியை தாங்கிக் கொள்ள முடியாமல் 26 வயதான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளவத்தை - மகேஷ்வரி வீதி பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிசாரின் தகவல்கள் படி சம்பவம் வருமாறு, வெள்ளவத்தை - மகேஷ்வரி வீதியில் வசித்து வந்த தாயொருவர் மாரடைப்பு காரணமாக களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு வைத்து அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தகவலை மூத்த சகோதரன் வீட்டிலிருந்த தனது இளைய சகோதரனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்பை அடுத்து, மிகவும் கவலையடைந்துள்ள இளைய சகோதரன், வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளைஞன் 26 வயதுடைய, பல்கலைக்கழகமொன்றில் பொறியியல் துறையில் கல்வி கற்கும் மாணவன் என தெரிவித்த பொலிஸார், அவர் தாய் மீது மிக்க அன்பு செலுத்தியவர் என மூத்த சகோதரன் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment