சர்வதேசத்திற்கு இரு முகத்தை காண்பிக்கும் கோட்டாபயவின் ஆட்சியை மாற்ற வேண்டும் : நீடித்தால் ஒட்டு மொத்த சிறுபான்மையினருக்கும் பேராபத்தென சுமந்திரன் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, September 19, 2021

சர்வதேசத்திற்கு இரு முகத்தை காண்பிக்கும் கோட்டாபயவின் ஆட்சியை மாற்ற வேண்டும் : நீடித்தால் ஒட்டு மொத்த சிறுபான்மையினருக்கும் பேராபத்தென சுமந்திரன் எச்சரிக்கை

சர்வதேச சமூகத்திற்கு இரு முகத்தினை காண்பிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியை மாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனநாயகத்திற்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்ட அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடித்தால் ஒட்டு மொத்த சிறுபான்மையினருக்கும் பேராபத்து என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘சமகாலம்’ இணைய வழியிலான நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம், உள்நாட்டில் இந்த அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. அவ்வாறான நிலையில் தற்போதைய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுதல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் எவ்வளவு தூரம் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள் என்று எழுப்பபட்ட வினாவிற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எந்தவொரு அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவ்வாறு கொள்ளப்போவதும் இல்லை. கடந்த அரசாங்கத்தின் மீதும் அவ்வாறான நிலைப்பாட்டிலேயே இருந்தோம். ஆனால் அவர்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக சொன்னார்கள். அதற்காக அவர்களுடன் இணைந்து முயற்சிகளை எடுத்தோம். அது சாத்தியமாகவில்லை. அவ்வாறிருக்கையில், தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கமானது சர்வதேசத்திற்கு இரட்டை முகத்தினைக் காண்பிக்கின்றது.

கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா.வின் 46ஆவது கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதனை முழுமையாக இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. பின்னர் ஜுனில் 47ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பொறுப்புக் கூறல் விடயத்தில் கூட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என்று ஜனாதிபதி டுவிட்டர் மூலம் அறிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாம் அதனை உடனடியாக வரவேற்றிருந்தோம். நடைமுறையில் அவரின் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டிருந்தோம். ஜனாதிபதியின் இந்த விடயத்தினை தானும் கவனித்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையாரும் தற்போது நடைபெற்று வரும் 48ஆவது அமர்வின் வாய்மூல அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறிருக்கையில் தற்போது மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. உண்மையிலேயே அரசாங்கம் தனக்குள்ள இரண்டு முகங்களில் எதனைக் காண்பிப்பது என்பது தொடர்பில் தெரியாது நிற்கின்றது. ஆகவே அரசாங்கம் தனது போக்கினை மாற்ற வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் நாட்டிற்கு மோசமான பின்விளைவு காத்திருக்கும்.

இதேவேளை, எதிரணிகளின் அரசுக்கு எதிரான ஒன்றிணைவின்போது இனப்பிரச்சினை விடயத்தினையும் உள்ளீர்க்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். கடந்த தடவையும் அந்த விடயம் உள்ளீர்க்கப்பட்டது. அந்த வகையில் இம்முறையும் அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது நாம் எமது விடயங்களையும் முன்னிலைப்படுத்துவோம்.

எவ்வாறாயினும் தற்போது காணப்படுகின்ற கொடூரமான ஆட்சியை தொடர இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளிக்க விடுவதானது சிறுபான்மை தேசிய இனங்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பேராபத்தானது.

விசேடமாக இந்த ஆட்சிக் காலத்தில் நில அபகரிப்புக்கள் அதிகமாகியுள்ளன. இந்நிலைமை தொடர்ந்தால் தீர்வு பற்றி பேசுகின்ற போது நாம் நிலமற்றவர்களாகி விடுவோம். அதற்கு பின்னர் தீர்வினைப் பெற்றுக் கொள்வதில் பயனில்லை. ஆகவே அவ்விதமான ஆக்கிரமிப்பு, அடக்குமுறை ஆட்சியை மாற்ற வேண்டும் என்றார்.

கேசரி

No comments:

Post a Comment