தட்டுப்பாடும் ஏற்படாது விலையும் அதிகரிக்கப்படாது, தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Sunday, September 12, 2021

தட்டுப்பாடும் ஏற்படாது விலையும் அதிகரிக்கப்படாது, தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் பந்துல

(இராஜதுரை ஹஷான்)

இறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருட்களின் உத்தரவாத தொகை அதிகரித்துள்ளமையால் உள்ளாடை பாவனைக்கு தட்டுப்பாடு ஏற்படாது. விலையும் அதிகரிக்கப்படாது. தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக குறைந்த விலைக்கு விற்பனை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தகத்துறை அமைச்சில் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவா று குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அந்நிய செலாவணியை வலுப்படுத்துவதற்காகவே இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற 623 பொருட்களின் உத்தரவாத விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை. இறக்குமதியாளர்கள். முழுத் தொகையினையும் ரூபா பெறுமதியில் வைப்பிலிட்ட பிறகு இறக்குமதி செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதாரணதொரு செயற்பாடாகும்.

இதனை எதிர்த்தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் சேறு பூசல் பிரசாரத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் உள்ளாடைக்கு தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது என சமூக வலைத்தளங்களிலும், ஊடக சந்திப்புக்களிலும் கீழ்த்தரமான முறையில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறான வெறுக்கத்தக்க கருத்துக்கள் தேசிய மட்டத்திலான ஆடைத் தொழில் துறைமை அவமதிப்பதாக காணப்படும். இலங்கையின் தைத்த ஆடைகளுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி நிலவுகிறது. தேசிய மட்டத்தில் தைக்கப்படும் உயர்தரமான ஆடைகளை குறைந்த விலையில் மக்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் நாட்டு மக்களின் பாவனைக்கு உள்ளாடை பற்றாக்குறை ஏற்படும் என்று குறிப்பிடும் கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாட்டு மக்களின் பாவனைக்கு தேவையான உள்ளாடைகள் போதுமான அளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதான நிலை உள்ளாடை உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. எக்காரணிகளுக்காகவும் உள்ளாடைக்கான தட்டுப்பாடும், விலை அதிகரிப்பும் ஏற்படாது. என்பதை வர்த்தகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன். சதொச விற்பனை நிலையம் ஊடாக உள்ளாடைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment