குப்பையில் சிக்கிய முகவரிகளினால் கல்முனை மாநகரில் சிலர் மீது அதிரடி சட்ட நடவடிக்கை ! - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

குப்பையில் சிக்கிய முகவரிகளினால் கல்முனை மாநகரில் சிலர் மீது அதிரடி சட்ட நடவடிக்கை !

சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் பிரதான வீதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொடர்ந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த குப்பைகளில் இருந்து பெறப்பட்ட முகவரிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க உள்ளோம் என கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையினால் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குப்பைகளினால் மக்கள் அசௌகரியம் எனும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்த இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் நோக்கில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். ரக்கீபின் ஆலோசனையின் பேரில் கள விஜயம் செய்த டாக்டர் அர்சத் காரியப்பர் தலைமையிலான சுகாதார குழுவினர் அந்த குப்பைகளை பிரித்து பார்த்தபோது அதிலிருந்த முகவரி அச்சிடப்பட்ட ஆவணங்களை கைப்பற்றினர்.
குப்பைகள் கொட்டப்பட்ட 23 இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கல்முனையில் இருந்து 20 பேரின் முகவரியும், சாய்ந்தமருதில் இருந்து 23 பேரும், மருதமுனையில் இருந்து 18 பேரும், நற்பிட்டிமுனையில் இருந்து 17 பேருமாக அதிலிருந்த முகவரியின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளானர்.

அந்த 78 பேருக்கும் எதிராக பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்தமைக்காக நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்த போவதாக அங்கு கருத்து தெரிவித்த போது பிரதம சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள் பலர் இணைந்து இந்நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

நூருல் ஹுதா உமர்

No comments:

Post a Comment