பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் குத்துச் சண்டை ஜாம்பவான் - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் குத்துச் சண்டை ஜாம்பவான்

அரசியல்வாதியாக மாறியுள்ள பிலிப்பைன்ஸ் முன்னாள் குத்துச் சண்டை ஜாம்பவான் மேணி பக்கியாவ், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஞாயிறன்று அறிவித்தார்.

நாட்டின் அதி உயர் பதவிக்கு பக்கியாவ் போட்டியிடுவார் என பல மாதங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு இதன் மூலம் அவர் முடிவு கட்டியுள்ளார்.

'இதுதான் சரியான நேரம். தலைமைத்துவத்தை எதிர்த்து போட்டியிட நாங்கள் தயாராகி விட்டோம்' என பக்கியாவ் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரொட்றிகோ டுட்டேர்ட்டேயின் ஆளுங் கட்சியிலுள்ள எதிர்தரப்பு ஒன்றினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஏற்ற பின்னர், ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எட்டு பிரிவுகளில் உலக சம்பியனானவரும் பிலிப்பைன்ஸின் தேசிய ஹீரோவுமான பக்கியாவ், லாஸ் வேகாஸில் கியூப குத்துச் சண்டை வீரர் யோர்தேனிஸ் உகாஸிடம் தோல்வி அடைந்த சில வாரங்கள் கடந்த நிலையில், தனது நிலைப்பாட்டை வெளியிட்டார்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினராக அரசியலில் 2010ஆம் ஆண்டு பிரவேசித்த பக்கியாவ், பின்னர் செனட் சபை உறுப்பினராக தெரிவானார். அன்றிலிருந்து நாட்டின் அதி உயர் பதவிக்கு அவர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழத் தொடங்கியது.

42 வயதான பக்கியாவை பெருந்தன்மைக்காகவும் வறுமைக்கோட்டை கடந்து வந்து உலகின் மிகச் சிறந்த மற்றும் செல்வந்த குத்துச் சண்டை விரர்களில் ஒருவராக உயரிய நிலையை அடைந்தமைக்காகவும் பிலிப்பைன்ஸ் மக்கள் போற்றுகின்றனர்.

வறுமைக்கு எதிரான போராட்டம், ஊழல் ஒழிப்பு நடவடிக்கை ஆகியன அவரது தேர்தல் பிரசாரத்தில் பிரதான இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

'எனது தராதரங்கள் எவை எனக் கேட்பவர்களே, நீங்கள் என்றாவது பசியை அனுபவித்திருக்கின்றீர்களா?' என பிடிபி லபான் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய பக்கியாவ் கேள்வி எழுப்பினார்.

'நீங்கள் என்றாவது ஒரு நாள் சாப்பிட இல்லாமல் பட்டினியால் துடித்தீர்களா? அயலவர்களிடம் கடன் வாங்கியுள்ளீர்களா? உணவகம் ஒன்றில் உணவு மீதப்படுமா என காத்திருந்தீர்களா? உங்கள் முன்னிலையில் நிற்கும் மாணி பக்கியாவ், வறுமையின் வடிவம்' என்றார் அவர்.

2022 ஜனாதிபதி தேர்தலில் டுட்டேர்ட்டேயின் புதல்வி சாராவை பக்கியாவ் எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த வருட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பதிவு செய்ய வேண்டிய கடைசி திகதி ஓக்டோபர் 8ஆம் திகதியாகும்.

டுட்டேர்டேவுக்கும் அவரது சர்ச்சைக்குரிய போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக்கும் சுவிசேஷ கிறிஸ்தவ விசுவாசியான பக்கியாவ் ஆதரவாக இருந்தார்.

இது இவ்வாறிருக்க, பல்லாயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படுவதற்கான அங்கீகாரத்தை சர்வதேச குற்றவியல் விசாரணை நீதிமன்றம் கடந்த வாரம் அளித்தது.

இந்நிலையில், 'தனி நபர்களின் உரிமைகளை தவறாகப் பயன்படுத்தாமல் சரியான வழியில் நடவடிக்கைகளை எடுப்பேன்' என ஏஎவ்பியிடம் பக்கியாவ் தெரிவித்தார்.

தலைவர் பதவிக்கு வந்தால் தற்போதைய ஜனாதிபதியைக் குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாப்பீர்களா என அவரிடம் கேட்டபோது, 'நாங்கள் அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள்' என பதிலளித்தார்.

(என்.வீ.ஏ.)

No comments:

Post a Comment