ச.தொ.ச. நிறுவனத்துக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட சுமார் 150 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட 56 ஆயிரம் கிலோ வரையிலான இரு வெள்ளைப் பூண்டு கொள்கலன்களை, உயர் அதிகாரிகளின் எந்த அனுமதியும் இன்றி, மூன்றாவது தரப்பொன்றுக்கு விற்பனை செய்த விவகாரத்தில், குறித்த மோசடிக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக கூறி வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலாயுதம் ஸ்ரீதரன் எனும் வர்த்தகரே, பேலியகொடை விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வத்தளை நீதிவான் ஹேஷாந்த டி மெல் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நம்பிக்கை துரோகம், சாட்சிகளை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் குறித்த வர்த்தகரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில், ச.தொ.ச. தலைமையகத்தின் பிரதி பொது முகாமையாளர் (நிதி) அனுர சிசிர பெரேரா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்தியவசியப் பொருட்களை ச.தொ.ச. வலையமைப்பு ஊடாக நிவாரண விலையில் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ், துறைமுக அதிகார சபையினால் ச.தொ.ச.வுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட 2 வெள்ளைப் பூண்டு கொள்கலன்கள் இந்த மாத ஆரம்பத்தில் இவ்வாறு மூன்றாம் தரப்புக்கு விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்தது.
வெலிசறை ச.தொ.ச. களஞ்சியத்திலிருந்து இவ்வாறு அவை விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் பேலியகொடை விஷேட குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment