நாளை எரிபாெருள் தட்டுப்பாடு ஏற்படும் : பொறுப்பை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - பந்துல சமன் குமார் - News View

Breaking

Sunday, September 12, 2021

நாளை எரிபாெருள் தட்டுப்பாடு ஏற்படும் : பொறுப்பை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - பந்துல சமன் குமார்

எம்.ஆர்.எம்.வசீம்

எரிபொருள் விநியோக நடவடிக்கையை சனிக்கிழமை நாட்களில் மேற்கொள்வதை நிறுத்துவதற்கு எரிபொருள் விநியோக கட்டுப்பாட்டு அதிகாரிகள் எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக நாட்டுக்குள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக வணிக சேவை தாெழிற்சாலை மற்றும் முற்போக்கு சேவை சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார் தெரிவித்தார்.

தனது தொழிற்சங்கம் ஆரம்பித்திருக்கும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் நிலைமையை காரணம் காட்டி சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திரகரிப்பு நிலையத்தில் இருந்து சனிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகிப்பதை நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நிறுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எமது தொழிற்சங்கம் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. இதன் காரணமாக நாட்டுக்குள் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கின்றது.

ஏனெனில் துறைமுகங்கள் உட்பட சில அத்தியாவசிய நிறுவனங்களுக்கு எரிபொருளை சேமித்து வைப்பதற்கு குறிப்பிட்டதொரு கொள்ளளவே இருக்கின்றது. அது எமக்கு தெரியும். அதனால்தான் இதனை மேற்கொள்ள வேண்டாம் என நாங்கள் எடுத்துக் கூறினோம். ஆனால் எமது கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்தனர்.

சனிக்கிழமை தினங்களில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை. அதனால் நாளை திங்கட்கிழமைக்கு நாட்டுக்குள் எரிபாெருள் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றோம். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதன் பொறுப்பை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அத்துடன் இந்த அதிகாரிகள் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவை நிறுத்துவதற்கே இந்த தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர். அப்படியானால் நாங்கள் அதற்கு எதிராக எந்தவொரு தீர்மானத்துக்கும் செல்வதற்கு தயாராக இருக்கின்றோம். ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவை இல்லாமலாக்கி எமது நிறுவனம் செலவை கட்டுப்படுவத்துவதாக இருந்தால், எரிபொருள் விநியோகிப்பவர்களுக்கான கடன் தவணையை நிறுவனம் தொடர்ந்து நீடித்திருக்கின்றது. இந்த வருடத்தில் மாத்திரம் 5 தடவைகள் இவ்வாறு கடன் தவணையை நீடித்திருக்கின்றது. இதனை எவ்வாறு செய்ய முடியும் என கேட்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment