குறுகிய காலத்திற்குள் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்கிறார் நிதியமைச்சர் பஷில் - News View

Breaking

Sunday, September 12, 2021

குறுகிய காலத்திற்குள் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்கிறார் நிதியமைச்சர் பஷில்

இராஜதுரை ஹஷான்

குறுகிய காலத்திற்குள் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். ஏற்றுமதி துறையை வலுப்படுத்தினால் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும். பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உரிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

தொழிலுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வை விரைவாக வழங்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

அந்நிய செலாவணி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு தொழிற்சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக கேள்வி காணப்படுகிறது. தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு தடையாக உள்ள விடயங்கள் குறித்து ஆராய்வது அவசியமாகும்.

இதற்கமைய கடந்த வருடம் சந்தை பொருட்கள் ஏற்றுமதியினால் ஒரு மாதத்திற்கு 840 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. நிறைவடைந்த 8 மாத காலப்பகுதியில் இத்தொகை 986 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் இறப்பர் மற்றும் இறப்பர் சார் உற்பத்திகள், பொறியியல் துறை உற்பத்திகளின் ஏற்றுமதி முன்னேற்றமடைந்துள்ளன. ஏற்றுமதி துறையினால் நிறைவடைந்த எட்டு மாத காலத்தில் 7886 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment