அசாத் சாலியின் பிணை கோரிக்கை அவரது சட்டத்தரணிகளால் வாபஸ் பெறப்பட்டது ! - News View

About Us

About Us

Breaking

Friday, September 24, 2021

அசாத் சாலியின் பிணை கோரிக்கை அவரது சட்டத்தரணிகளால் வாபஸ் பெறப்பட்டது !

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பிணையில் விடுவிக்குமாறு, அவரது சட்டத்தரணிகள் முன் வைத்த கோரிக்கை அவர்களால் வாபஸ் பெறப்பட்ட பின்னர் நிராகரிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இதற்கான அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

அசாத் சாலிக்கு பிணைக் கோரும் மனு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா மன்றில் ஆஜரானார். அவர் பிரதிவாதிக்கு எதிராக 2 ஆம் இலக்க மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை கடந்த ஜூன் மாதம் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டதாக கூறினார். எனினும் அது பிரதிவாதிக்கு இன்னும் கையளிக்கப்படவில்லை என்பதும் இதன்போது மன்றில் சுட்டிக் காட்டப்பட்டது.

இவ்வாறான நிலையில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்றில் பிரதிவாதி தொடர்பிலான பிணைக் கோரிக்கை முன் வைக்கப்படுமாக இருப்பின், அது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை உறுதி செய்ய தாம் தயார் என சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா குறிப்பிட்டார்.

இதன்போது நீதிபதி மஞ்சுள திலகரத்ன, குறித்த நபருக்கு வேறு ஒரு நீதிபதி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள பின்னணியில் பிணை தொடர்பில் தான் ஆராய்வது பொருத்தமாக இருக்காது எனவும், குறித்த நீதிபதியிடமே பிணை கோரிக்கையை முன் வைக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

இதன்போது அசாத் சாலி சார்பில் மன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் சட்டத்தரணி ஹபீல் பாரிஸ், உள்ளிட்டவர்களுடன் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரனி மைத்திரி குனரத்ன, அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அல்லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த எந்த சாட்சியங்களும் இல்லை என்று கொழும்பு நீதிவானின் தீர்மானத்தை மேல் நீதிமன்றுக்கு அரிவித்தார்.

அந்த உத்தரவின் பிரதியையும் மன்றுக்கு கையளித்த அவர், சட்டமா அதிபர் இந்த விவகாரத்தில் பிணை வழங்க கொள்கை அளவில் இணங்கியுள்ளதாக தாம் அறிவதாகவும் குறிப்பிட்டார்.

அதன்படி, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையான நீதிபதி முன்னிலையிலேயே பிணை கோரிக்கை முன் வைப்பதாகவும், இன்று முன் வைத்த கோரிக்கையை வாபஸ் பெறுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment