இலங்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடிதம் எழுதியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

இலங்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடிதம் எழுதியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம்

(நா.தனுஜா)

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைவரத்தை மீளச் சீரமைப்பதற்கும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளியை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்றவாறான அழுத்தத்தைப் பிரயோகிக்கக் கூடிய வகையில் ஜி.எஸ்.பி பிளஸ் என்ற வலுவான ஆயுதத்தை பயன்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனைகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், எவ்வித ஆதாரங்களுமின்றி அல்லது நீதிமன்ற மேற்பார்வையின்றித் தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்தல், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீளப் பெறல், மனித உரிமைசார் வழக்குகள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை முன்னெடுத்தல், ஐ.நாவினால் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய விடயங்களை அமுல்படுத்துவதற்கு இணங்குதல் ஆகியவற்றை உள்ளடக்குமாறும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய ஒன்றியப் பணிப்பாளர் லொற்றே லெய்ச்ற் மற்றும் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள கடித்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் மிக மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் பகிர்வதற்கும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதற்கான மீளாய்வு குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்குமே இந்தக் கடிதத்தை எழுதுகின்றோம்.

இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளியைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக மனித உரிமைகளுக்கு உயரிய மதிப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் பயன்படுத்தக் கூடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் வலுவானதொரு ஆயுதமே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையாகும். எனவே தற்போதைய நெருக்கடி நிலையில் அதனை மிகவும் செயற்திறனான முறையில் பயன்படுத்துமாறு உங்களிடம் கோருகின்றோம்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஏற்கனவே மேம்பாடடைந்து வந்த மனித உரிமைகள் நிலைவரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது.

இலங்கையின் இந்த அவதானத்திற்குரிய நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் பல தடவைகள் கருத்து வெளியிட்டிருந்ததுடன், இறுதியாக இம்மாதம் ஆரம்பமான மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் வெளியிடப்பட்ட வாய் மூல அறிக்கையிலும் இதுபற்றிப் பிரஸ்தாபித்திருந்தார்.

அதுமாத்திரமன்றி கடந்த ஜனவரி மாதம் 'இலங்கையின் தற்போதைய போக்கு மனித உரிமை நிலைவரங்கள் மிகவும் மோசமடைவதை வெளிப்படுத்தும் ஆரம்ப சமிக்ஞையாக இருப்பதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு வலுவான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்' என்றும் மிச்சேல் பச்லெட் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் இலங்கை தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் விசேட செயற்பாடுகளுக்கான அறிக்கையாளர் குழுவினால் கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அதில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் மீளவும் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு மிகவும் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

அரசியலமைப்புத் திருத்தம், அதிகரித்து வரும் இராணுவமயமாக்கல், ஒன்றுகூடுதல் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பவை மட்டுப்படுத்தப்படல், சிறுபான்மையின சமூகங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் ஒடுக்கு முறைகள், தன்னிச்சையான தடுத்து வைப்புகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படல், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளின் பின்னடைவு, நிலைமாறு கால நீதியை அடைந்து கொள்வதற்கான நடவடிக்கைகளில் பின்னடைவு ஆகிய முக்கிய சில விடயங்கள் தொடர்பில் அவர்களது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இலங்கை கொண்டிருக்கக் கூடிய சர்வதேச சட்டங்களுக்கு அமைவான கடப்பாடுகள் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி மிகையான நெருக்குவாரங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் போன்றோர் பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதுடன் தன்னிச்சையான கைது மற்றும் தடுப்பு வைப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மையின தமிழ், முஸ்லிம்களாகவே இருக்கின்றனர். அதுமாத்திரமன்றி வடக்கிலும் கொழும்பிலும் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டங்களும் அடக்கப்பட்டன.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவது தொடர்பில் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு இலங்கை இணையனுசரணை வழங்கியுள்ளமை நேர்மறையான விடயமாக உள்வாங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ அரசாங்கம் அந்த நிலைப்பாட்டை மாற்றியமைத்திருப்பதுடன் கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தையும் நிராகரித்திருக்கின்றது.

மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் கூறியதுபோன்று, இலங்கை அதன் கடந்த காலக் குற்றங்களையும் மீறல்களையும் மறுக்கின்ற நிலையிலேயே இருக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவானது, மிக முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டவர்களை அவற்றிலிருந்து விடுவிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது.

மேலும் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம், அதற்கு முந்தைய திருத்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் சுயாதீனக் கட்டமைப்புக்களின் சுதந்திரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் உள்ளடங்கலாக உண்மை மற்றும் பொறுப்புக் கூறலை நிலைநாட்டுவதற்கான கட்டமைப்புக்களுக்கான புதிய நியமனங்கள் அவற்றின் நம்பகத் தன்மை தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கின்றன.

அத்தோடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பில் தேசிய மனித உரிமை அமைப்புக்களுக்கான உலகளாவிய கூட்டிணைவினால் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.

இலங்கை கடந்த 2017 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக் கொண்டபோது, பயங்கரவா தடைச் சட்டத்தை இல்லாமல் செய்வதாக வாக்குறுதியளித்த போதிலும் அரசாங்கங்கள் அதனை நிறைவேற்றுவதற்குத் தவறிவிட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் இந்தச் சட்டத்தின் பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதியினால் இச்சட்டத்தின் கீழ் இரண்டு சரத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அவை நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் இன்னமும் மோசமானதாக மாறும்.

சர்வதேசத்தின் அழுத்தங்களின் எதிரொலியாக பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த போதிலும், அது முழுமையாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம், இலங்கையில் மோசமடைந்துள்ள மனித உரிமைகள் நிலைவரத்தின் பாரதூரத் தன்மையினை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. கடந்த ஜுன் மாதம் 10 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக அது மேலும் வெளிப்பட்டது.

எனவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தின் கீழான மனித உரிமைகள் கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் மீறியிருப்பதாக நீங்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதுமாத்திரமன்றி மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், இலங்கையினால் வெளிப்படைத் தன்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டிய கடப்பாடுகளை உரிய கால அட்டவணையுடன் நிர்ணயிக்குமாறும் உங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

அக்கடப்பாடுகளில் சிவில் சமூக அமைப்புக்களை அமைதிப்படுத்த முற்படல் மற்றும் சிவில் சமூக இடைவெளியைச் சுருக்குதல் ஆகியவற்றை முடிவிற்குக் கொண்டு வரல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், எவ்வித ஆதாரங்களுமின்றி அல்லது நீதிமன்ற மேற்பார்வையின்றித் தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்தல், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீளப் பெறல், மனித உரிமைசார் வழக்குகள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை முன்னெடுத்தல், ஐ.நாவினால் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய விடயங்களை அமுல்படுத்துவதற்கு இணங்குதல் ஆகியவை முக்கியமாக உள்ளடக்கப்படவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment