இணையம் ஊடாக பண மோசடி செய்த இரு நைஜீரிய பிரஜைகளுக்கும் விளக்கமறியல் : 4 மாதங்களில் 170 முறைப்பாடுகள் : நிவரணப் பொதிகள் வழங்கி ஏழைப் பெண்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

இணையம் ஊடாக பண மோசடி செய்த இரு நைஜீரிய பிரஜைகளுக்கும் விளக்கமறியல் : 4 மாதங்களில் 170 முறைப்பாடுகள் : நிவரணப் பொதிகள் வழங்கி ஏழைப் பெண்களின் பெயரில் வங்கிக் கணக்குகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

ரூ. 10 ஆயிரம் பெறுமதியான நிவரணப் பொதிகளை வழங்கி, கொழும்பிலுள்ள ஏழைப் பெண்களின் பெயரில், வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து, அதனூடாக நைஜீரிய பிரஜைகள் முன்னெடுத்த பாரிய பண மோசடி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இணையம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட 58, 30 வயதுகளை உடைய நைஜீரிய பிரஜைகள் இருவர் தெஹிவளையில் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் அசோக தர்மசேனவின் கீழ் இடம்பெறும் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி மோசடி செய்யப்பட்ட பணம், 'பிட் கொயின்' உள்ளிட்ட பல்வேறு மோசடி முறைமைகள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பட்டுள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆடை தொழில் நுட்பவியலாளர் ஒருவரின் முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுத்த விசாரணைகளிலேயே இவை வெளிப்பட்டுள்ளன.

57 வயதான குறித்த பெண்ணை வட்ஸ் அப் ஊடாக தொடர்பு கொண்டுள்ள, தெஹிவளையில் வசிக்கும் இரு நைஜீரியர்கள், லண்டனில் இருந்து இந்நாட்டில் முதலீட்டு நடவடிக்கை ஒன்றினை ஆரம்பிக்க அவரை இணைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் லண்டனிலிருந்து டொலர்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டியொன்று அவருக்கு அனுப்பட்டுள்ளதாகவும், அதனை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க வங்கிக் கணக்கொன்றுக்கு 5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வைப்பிலிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

கூரியர் சேவை ஊழியராக நடித்த ஒருவரின் அறிவித்தல் பிரகாரம், குறித்த பெண் பணம் செலுத்தியுள்ள போதும், அவருக்கு அந்த பரிசு கிடைக்கவில்லை.

இந்நிலையிலேயேதான் மோசடி செய்யப்பட்டுள்ளமையை உணர்ந்து குறித்த பெண் முறையிட்டுள்ளதுடன், அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது குறித்த முறைப்பாட்டாளர், வைப்பு செய்த பணமானது கொழும்பு 12 ஐ சேர்ந்த பாத்திமா என்பவரின் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணை விசாரித்துள்ள சி.ஐ.டி. பல்வேறு விடயங்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் விசாரித்த போது, முஸ்லிம் இளைஞர் ஒருவர் 10 ஆயிரம் ரூபா நிவாரண பொதியொன்றினை தமக்கு தந்து, இவ்வாறு தனது பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பித்து, அக்கணக்கின் இலத்திரனியல் அட்டையை அவர் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளில், ஒரு வங்கிக் கணக்கு புத்தகம் தொடர்பில் 20 ஆயிரம் ரூபா திட்டமிடப்பட்ட இளைஞர் குழுவொன்றுக்கு செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த விசாரணைகளிலேயே நைஜீரியர்கள் இருவரும் தெஹிவளையில் வைத்து கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது, கொழும்பின் ஏழை பெண்களை ஏமாற்றி ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் 21 இன் இலத்திரனியல் அட்டைகள் அவர்களிடம் இருந்து சி.ஐ.டி.யினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த இரு மாதங்களில் குறித்த 21 வங்கிக் கணக்குகள் ஊடாக சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நைஜீரியர்களால் முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்த சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பொலிஸ் தலைமையக உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு மாதங்களில் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் 170 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், பண மோசடிக்கு உள்ளானவர்களில் வைத்தியர்கள், உள்ளிட்ட சமூகத்தில் உயர் மட்டத்தில் இருக்கும் பலர் காணப்படுவதாகவும் குறித்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment