அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைச்சாத்து : ராஜபக்ஷர்களின் முறையற்ற செயற்பாடு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெறும் பாதிப்பு - அனுரகுமார திஸாநாயக்க - News View

Breaking

Sunday, September 19, 2021

அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைச்சாத்து : ராஜபக்ஷர்களின் முறையற்ற செயற்பாடு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெறும் பாதிப்பு - அனுரகுமார திஸாநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

முறையான விலை மனுக்கோரல் இல்லாமல் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். ராஜபக்ஷர்களின் முறையற்ற செயற்பாடு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெறும் பாதிப்பை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

முறையான பொருளாதார முகாமைத்துவம் இல்லாததன் காரணமாக தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கான தேசிய வருமானம் 4 பில்லியனாக காணப்படும் போது, அரச செலவினம் 14 பில்லியனாக காணப்படுகிறது. இந்நிலை தொடருமாயின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (19) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் வலு சக்தி முக்கியமானது. இத்துறை அரசுக்கு சொந்தமாக காணப்பட்ட வேண்டும்.

அமெரிக்க குடியுரிமையினை கொண்ட நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கெரவலபிடிய அனல் மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்து, அமைச்சரவை அனுமதியையும் வாய் மூல விளக்கப்படுத்தலுடன் பெற்றுக் கொண்டுள்ளார்.

கெரவலபிடிய அனல் மின் நிலையத்தின் ஊடாக தற்போது 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் முழுமையாக அரச நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்.

கெரவலபிடிய மின் நிலைய அபிவிருத்திக்கான விலை மனுக்கோரல் கடந்த பெப்ரவரி மாதம் கோரப்பட்டது. ஆனால் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விலை மனுக்கோரலில் குறிப்பிடப்பட்ட விடயங்களை பின்பற்றாமல் குறித்து அபிவிருத்தி செயற்திட்டத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை யோசனை வாய் மூலமான விளக்கப்படுத்தல் ஊடாக முன்வைத்துள்ளார்.

அனல் மின் நிலையத்தின் 40 சதவீத பகுதியை விற்பனை செய்யவும், அனல் மின் நிலையத்தின் உள்ளக சேவைக்கான நிர்மான பணிகளை முன்னெடுக்கவும் அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விலை மனுக்கோரல் இல்லாமல் நிர்மான அபிவிருத்தி பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இதில் எந்தளவிற்கு உண்மைத் தன்மை காணப்படும் என்பதை அறிய முடிகியது.

நிர்மான பணிகள் விவகாரத்தில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. 5 வருட காலத்திற்கு எரிவாயு விநியோகிப்பதற்கான உரிமம் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கெரவளபிடிய மின் நிலையத்திற்குள் புதியதாக ஒரு எரிவாயு களஞ்சியசாலை நிர்மானிக்கப்பட்டால் அதற்கான உரிமமும் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கெரவளபிடிய மின் நிலையம் தனது குடும்ப சொத்து என கருதிக் கொண்டு நிதியமைச்சர் செயற்படுகிறார். அனல் மின் நிலையத்தின் 40 சதவீதத்தை அமெரிக்காவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விற்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தை மீள பெறுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் அன்று விற்கப்படும் போது ராஜபக்ஷர்கள் பாராளுமன்றிற்குள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விற்பதற்கு முழுமையான ஆதரவு வழங்கினார்கள்.

பொருளாதார கேந்திர நிலையத்தையும், தேசிய வளங்களையும் பிற நாட்டவர்களுக்கு விற்பதற்கான முயற்சியை ராஜபக்ஷர்கள் முன்னெடுத்துள்ளார்கள்.

கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் அரசாங்கம் இரகசியமான முறையில் தேசிய வளங்களை விற்கிறது. மக்கள் வீதிக்கிறங்கி போராட முடியாத நிலை காணப்படுகிறது. இதனை ராஜபக்ஷர்கள் தங்களின் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் தவறான தீர்மானங்களை எடுத்துள்ளது. ஜனாதிபதி, விவசாயத்துறை அமைச்சரின் முறையற்ற செயற்பாடுகளினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுக்கப்பட்டுள்ள அரிசியை கைப்பற்றுவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். சேதன பசளை உற்பத்தி செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது சேதன பசளை இறக்குமதி செய்யப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உரத்தை இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள். விவசாயிகளின் எதிர்காலத்தை சீரழித்துள்ளார்கள். இரசாயன உரப் பாவனை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இரசாயன உரப் பாவனையை தடை செய்ய வேண்டுமாயின் குறைந்தபட்சம் 5 வருட கால செயற்திட்டமாவது செயற்படுத்தியிருக்க வேண்டும். யுத்த களத்தில் தீர்மானம் எடுப்பதை போன்று ஜனாதிபதி இரசாயன உரம் பாவனை மற்றும் இறக்குமதியை தடை செய்தார்.

தவறான பொருளதார முகாமைத்துவத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறந்த திட்டமிடல் இல்லாத காரணத்தினால் வருமானத்தை ஈட்டும் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கான அரச வருமானம் 4 பில்லியனாக உள்ள போது அரச செலவினம் 14 பில்லியனாக காணப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு வரையில் 13 ரில்லியனாக காணப்பட்ட அரச முறை கடன் இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 16.3 ரில்லியனாக உயர்வடைந்துள்ளது.

பொருளாதரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசியல் வாதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் ஏதும் குறையடையவில்லை. நடுத்தர மக்களே பொருளாதார ரீதியில் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நிதி பற்றாக்குறை காணப்படுவதன் காரணமாகவே மத்திய வங்கி தொடர்ந்து நாணயம் அச்சிடுகிறது. மோசடியாளரும், மோசடியை வெளிப்படுத்திய வரும் ஒரு இடத்தில் இருக்க முடியாது. இதுவே மத்திய வங்கியின் தற்போதைய நிலை.

பிணைமுறி மோசடி தொடர்பில் தடயவியல் கணக்காய்வு அறிக்கைக்கு சாட்சியமளித்த மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் புதிய ஆளுநர் அஜித் நிவாரட் கப்ராலின் வருகைக்கு பின்னர் மாற்றப்பட்டுள்ளார்கள். இந்நிலை தொடர்ந்தால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment