(இராஜதுரை ஹஷான்)
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளையும், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் இலங்கை சிறந்த முறையில் முன்னெடுக்கிறது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவது பாதுகாப்பானது. கொழும்பில் இடம் பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு இலங்கைக்கு பலமிக்கதாக அமையும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொதுச் செயலாளர் முஹமட் இஸான் பான் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் வருடம் மே மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று நிதியமைச்சில் இடம்பெற்றது.
அபிவிருத்தி வங்கியை பிரநிதித்துவப்படுத்தி அதன் தென்னாசிய திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கென்ச் யொகொயானா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
இந்த வருடாந்த மாநாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பு நாடுகளின் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இம்மாநாட்டில் நிதியமைச்சர்கள், மத்திய வங்கியின் ஆளுநர்கள், சர்வதேச வங்கி பிரதானிகள், நிறுவன நிறைவேற்று பணிப்பாளர்கள், சர்வதேச மற்றும் உள்ளுர் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
'கொவிட்-19 தொற்றுக்கு பின்னர் உலகில் காலநிலை மாற்றத்திற்கு அமைய நிலையான பொருளாதாரத்தை ஸ்தாபித்தல்' என்பது இம்மாநாட்டின் தொனிப்பொருளாக உள்ளது. மாநாட்டின் போது இரு தரப்பு பேச்சுவார்த்தை, தொகுதி கூட்டங்கள் மற்றும் உப வலய கூட்டங்கள் இடம் பெறவுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டை நடத்தும் இரண்டாவது வலய நாடாக இலங்கை காணப்படுகிறது. வருடாந்த மாநாட்டை நடத்த இலங்கையை தெரிவு செய்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய சூழலில் மாநாட்டை நடத்துவதற்கு சிறந்த நாடாக இலங்கையை தெரிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்தவத்தின் கீழ் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. கொவிட் வைரஸ் பரவலை இலங்கை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியுள்ளது. கொவிட் தாக்கத்திற்கு பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்த இடம்பெறவுள்ள மாநாடு சிறந்த வாய்ப்பாக அமையும்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்துறையை மேம்படுத்த உரிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பு அவசியம் என குறிப்பிட்ட நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ முதலீட்டாளர்களாகவும், சுற்றுலா பயணிகளாகவும் அனைவரும் இலங்கைக்கு வருகை தர வேண்டும் எனவும் ஆசிய வங்கியின் தென்னாசிய திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளருக்கும். ஏனைய தரப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா நகரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகம் அமையப் பெற்றுள்ளது. காணொளி முறைமை ஊடாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொதுச் செயலாளர் முஹமட் இஸான் பான் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளையும், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் இலங்கை சிறந்த முறையில் முன்னெடுக்கிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவது பாதுகாப்பானது. கொழும்பில் இடம் பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு இலங்கைக்கு பலமிக்கதாக அமையும் என பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment