கல்முனை பிராந்தியத்திற்கு விரைவில் பைஸர் தடுப்பூசி - டாக்டர் ஜீ. சுகுணன் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

கல்முனை பிராந்தியத்திற்கு விரைவில் பைஸர் தடுப்பூசி - டாக்டர் ஜீ. சுகுணன்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு விரைவில் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

நீண்ட கால நோய்களுடன் காணப்படும் விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். சிறுவர் விசேட நிபுணர்கள் மற்றும் பொது நிபுணர்கள் உள்ள வைத்தியசாலைகளில் அந்த தடுப்பூசிகள் வழங்கப்படும்.

கிளினிக் செல்லாமல் வீட்டில் உள்ள விசேட தேவையுள்ள சிறுவர்கள், ஆதார வைத்தியசாலைகளுக்குச் சென்று ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறும், தகுதியானவர்கள் தடுப்பூசியினைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு கிரமமான முறையில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் தத்தமது பிரிவிலுள்ள சுகாதார வைத்தியதிகாரி காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள 13 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலும், 07 ஆதார வைத்தியாசாலைகளிலும், 13 பிரதேச வைத்தியசாலைகளிலும் மற்றும் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் விசேட மையங்களிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள், இரண்டாவது தடுப்பூசி இதுவரை பெறாதவர்கள் தத்தமது சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்குச் சென்று தங்களுக்கான இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எவ்வித பீதியும் அடையாமல் தங்களுக்கான தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறும் இவை எதிர்காலத்தில் கட்டாயமானதாக கருதப்படுமெனவும் தெரிவித்தார்.

இதுவரையில் முதலாவது தடுப்பூசி 02 இலட்சத்தி 07 ஆயிரத்தி 300 நபர்களுக்கும், இரண்டாவது தடுப்பூசி 01 இலட்சத்தி 73 ஆயிரத்தி 570 நபர்களுக்கும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு இதுவரை 36 ஆயிரத்தி 29 நபர்களுக்கும், இரண்டாவது தடுப்பூசி 06 ஆயிரத்தி 250 நபர்களுக்கும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

(காரைதீவு, ஒலுவில் விசேட நிருபர்)

No comments:

Post a Comment