இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை விவகாரம் தொடர்பான விசாரணைகள் எவ்வித அழுத்தத்திற்கும் உள்ளாகவில்லை. தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள சிறைக் கைதிகளுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் விஜயத்தின் போது குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றது என்பதை எவரும் நிராகரிக்கவில்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு மனித உரிமை ஆணைக்குழுவினர், தமிழ் அரசியல்வாதிகள், எதிர்க்கட்சியினர் விஜயம் செய்தவேளை சிறைச்சாலை அதிகாரிகள் அல்லது தனி நபர்கள் ஏதாவது அழுத்தங்களை கொடுத்தார்களா என தமிழ் அரசியல் கைதிகளிடம் வினவியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்களிற்கு எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் இந்த விவகாரத்தை அரசியல் மயப்படுத்த வேண்டிய தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் மனிதாபிமானமாகப் பார்க்கப்படும் அதேவேளை சிறைச்சாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த சில தினங்களாக நாம் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் சென்று அங்குள்ள குறைநிறைகளை கேட்டறிந்து வருகின்றோம்.
நேற்று முன்தினம் நாம் வெளிக்கடை சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள சிறைக் கைதிகளுடன் கலந்துரையாடினோம். அதனையடுத்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று சிறைச்சாலையில் கைதிகளுடன் நாம் கலந்துரையாடிய அதேவேளை அங்கு முன்னாள் புலி உறுப்பினர்களான சிறைக் கைதிகளும் உள்ளனர். அவர்களுடனும் நாம் கலந்துரையாடினோம்.
அண்மைக்காலமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அவர்கள் சிறைக் கைதிகளுக்கு போதிய பாதுகாப்பின்மையால் அவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளனர்.
அது தொடர்பில் நாம் அவர்களுடன் கலந்துரையாடிய போது அவர்களுக்கு இங்கு வசதிகள் அல்லது பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்தனர்.
எனினும் தமது சொந்த பிரதேசமான யாழ்ப்பாண பிரதேசத்திற்கு தம்மை அனுப்ப முடியுமானால் நல்லதென அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்திற் கொண்டு அது தொடர்பில் ஆராய்வது அவசியமென நாம் அவர்களிடம் தெரிவித்தோம். எனினும் தற்போது அவர்கள் இருக்கும் அனுராதபுரம் சிறைச்சாலையில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்தால் நாம் வேறு இடத்திற்கு மாற்ற முடியுமென அவர்களிடம் கேட்டபோது அவ்வாறு இங்கு எந்த பாதுகாப்பு பிரச்சினைகளும் கிடையாதென அவர்கள் தெரிவித்தனர்.
தமது பிரதேசத்தில் தடுத்து வைக்கப்பட்டால் தமது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பாக அமையுமென்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பொதுவாகவே சிறைக் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் நாம் அங்கு கலந்துரையாடினோம்.
குறிப்பாக வடக்கை சேர்ந்த சிறைக் கைதிகள் தமது குடும்பத்தினர் தமக்கு வழங்கும் பொருட்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க வவுனியா அல்லது யாழ்ப்பாணம் போன்ற சிறைச்சாலைகளில் அவர்கள் அதனை வழங்கினால் அவற்றை உரிய கைதிகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று நாம் தெரிவித்தோம்.
அதேபோன்று அவர்களது உறவினர்களுடன் வீடியோ தொழில்நுட்பம் மூலம் அவர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்படுமானால் வவுனியா அல்லது யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்று அங்கிருந்து அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்றும் நாம் தெரிவித்தோம். மனிதாபிமான ரீதியில் அதனை கவனத்திற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.
லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:
Post a Comment