பாற்பண்ணை என்ற போர்வையில் மலையகத்தில் வெளியார்களை திட்டமிட்டு குடியேற்றுவதற்கான சதித்திட்டமாே என்ற சந்தேகம் - வடிவேல் சுரேஷ் - News View

Breaking

Friday, September 10, 2021

பாற்பண்ணை என்ற போர்வையில் மலையகத்தில் வெளியார்களை திட்டமிட்டு குடியேற்றுவதற்கான சதித்திட்டமாே என்ற சந்தேகம் - வடிவேல் சுரேஷ்

(எம்.ஆர்.எம்.வசீம்)

பால் உற்பத்தி செய்வதற்கென தெரிவித்து மலையக பெருந்தோட்டங்களில் அரசாங்கம் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பெற்றுக் கொள்ள எடுத்திருக்கும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மலையகத்தில் வெளியார்களை திட்டமிட்டு குடியேற்றுவதற்கான சதித்திட்டமாே என்ற சந்தேகம் எழுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்திருக்கும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறுகுறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் பல பாற்பண்ணைகள் இருக்கும் நிலையில் அதனை அபிவிருத்தி செய்யாமல், மலையகத்தில் பெருந்தோட்டங்களில் ஆயிரக்கணக்கான காணிகளை பெற்றுக் கொண்டு புதிதாக பாற்பண்ணை அமைக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. அதற்காக அமைச்சரவையின் அனுமதியும் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

மலையக மக்களுக்கு பல அடிப்படை பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அதனை தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது.

அவ்வாறான நிலையில் மலையகத்தில் தமிழ் சிங்கள மக்களின் ஒற்றுமையை இல்லாமல் செய்வதற்கான திட்டமாகவே, அங்குள்ள ஆயிரக்கணக்கான காணிகளை பெற்றுக் கொண்டு, வெளியாட்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

மலையக மக்கள் எப்போதும் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருபவர்கள். அதனை இல்லாமலாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment