நாட்டை தொடர்ந்தும் மூடி வைத்திருக்க முடியாது, அரசியல் இலாபத்தை நாடாமல் ஒன்றாக செயற்படுவது அவசியம் - அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட தேரர் - News View

Breaking

Wednesday, September 8, 2021

நாட்டை தொடர்ந்தும் மூடி வைத்திருக்க முடியாது, அரசியல் இலாபத்தை நாடாமல் ஒன்றாக செயற்படுவது அவசியம் - அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட தேரர்

கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தொடர்ந்தும் மூடி வைத்திருக்க முடியாதென அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார். 

இதனை பொதுமக்கள் புரிந்து கொண்டு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அத்தியாவசியமானதென மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு 30 இலட்சம் ரூபா பெறுமதியான உயர் அழுத்த ஒட்சிசன் சிகிச்சைக் கருவித் தொகுதி (high flow oxygen therapy) உள்ளிட்ட உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வின் போதே மகாநாயக்க தேரர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். இந்த நிகழ்வு நேற்று (7) அஸ்கிரிய விஹாரையில் நடைபெற்றது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் காலப்பகுதியில் சிலர் அநாவசிய பயணங்களை மேற்கொண்டு, வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் நாட்டை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டெடுக்க முடியாமல் போகலாம்.

தொடர்ந்து நாட்டை மூடும் பட்சத்தில் பொருளாதாரத்தின் மீது தாக்கம் ஏற்படும். எனவே, நாட்டை விரைவாக மீண்டும் திறக்க வேண்டுமானால், அரசாங்கத்திற்கும் சுகாதாரத் துறையினருக்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். 

தற்போதைய கஷ்டமான சந்தர்ப்பத்தில் சகலரும் இன, மத பேதங்கள் மறந்து அரசியல் இலாபத்தை நாடாமல் ஒன்றாக செயற்படுவது அவசியம். இதன் மூலம், கொவிட்19 பெருந்தொற்றைத் தோற்கடித்து மீண்டும் வெற்றியுடன் நிமிர்ந்து நிற்கலாமென அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் குறிப்பிட்டர்

கொரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பல்குக்-சா (BULGUK-SA) விகாரையின் தலைமை குரு சங்கைக்குரிய ஜோயென் வூ தேரரின் அனுசரணையுடன் இலங்கை - கொரிய பௌத்த சங்கத்தின் மூலம் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தேசிய மகாசங்க சம்மேளனத்தின் தலைவருமான சங்கைக்குரிய லியன்வல ஷாசனரத்தன தேரர் தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லா

No comments:

Post a Comment