வெலிக்கடை சிறைச்சாலை இடமாற்றம்; பெண் கைதிகளுடனுள்ள குழந்தைகளின் பாதுகாப்பு, நலனில் கவனம் செலுத்துங்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

Breaking

Wednesday, September 8, 2021

வெலிக்கடை சிறைச்சாலை இடமாற்றம்; பெண் கைதிகளுடனுள்ள குழந்தைகளின் பாதுகாப்பு, நலனில் கவனம் செலுத்துங்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

வெலிக்கடை சிறைச்சாலை கட்டடத் தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடனுள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு (06) அறிவுறுத்தினார்.

வெலிக்கடை சிறைச்சாலை கட்டடத் தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திலுள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பிற்கு இடமாற்றம் செய்யும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக ஸும் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் அலரி மாளிகையிலிருந்து கலந்து கொண்டபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

30 பில்லியன் ரூபாய் செலவிலான இத்திட்டத்தை 2024ஆம் ஆண்டளவில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் இதன்போது பிரதமருக்கு நம்பிக்கை தெரிவித்தனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைக்கு மத்தியில் திறைசேரியிலிருந்து இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படாதமையினால், அரசாங்கத்திற்கு சுமையாக இல்லாமல் மாற்று வழிகளினூடாக இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி, கழிவுப் பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா இதன்போது பிரதமருக்கு தெளிவுபடுத்தினார்.

பொரளையிலுள்ள வெலிக்கடை சிறைச்சாலை 40 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாகும். அங்குள்ள செபர்ல் வார்டு மற்றும் சிறைச்சாலை தலைமையக கட்டடம் என்பவற்றை ஹோட்டல் திட்டமொன்றிற்காக ஒதுக்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

திட்டம் செயற்படுத்தப்படும் ஹொரண மில்லேவ பிரதேசத்திலுள்ள நிலப்பரப்பு பெருந்தோட்ட நிறுவனமொன்றிற்கு சொந்தமான இறப்பர் உற்பத்தி செய்யப்பட்ட நிலமாகும். அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 123 ஊழியர்களுக்கு இழப்பீடு செலுத்தப்படும். அவர்கள் வசித்த 57 தோட்ட குடியிருப்புகளுக்கு பதிலாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 57 புதிய வீடுகள் அமைத்து கொடுக்கப்படும்.

சில பெண் கைதிகளுடன் குழந்தைகளும் காணப்படுவதால் அப்பிள்ளைகளின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் பிரதமர் குறிப்பிட்டார். 

அதற்கமைய பெண்கள் சிறைச்சாலையை மில்லேவவில் நிறுவும் போது குழந்தைகளுள்ள கைதிகளை வேறுபடுத்தி குழந்தைகளுக்காக பராமரிப்பு மையமொன்று அமைக்கப்படுமென சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரதமருக்கு நம்பிக்கை வெளியிட்டார்.

No comments:

Post a Comment