எம்.மனோசித்ரா
தடுப்பூசி வழங்கல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக நாட்டில் தற்போது ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கையும், அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய தொற்றாளர் எண்ணிக்கையும் பெருமளவில் குறைவடைந்துள்ளதாக வெளிக்கள நோயாளர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார்.
நாட்டில் தற்போது கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கான காரணி தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைதலில் தடுப்பூசி வழங்கல் முக்கிய பங்கினை வகிக்கிறது. தடுப்பூசி வழங்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால் அதிகளவானோர் கொவிட் தொற்றுக்கு உள்ளான போதிலும், தீவிர நிலைமையை அடைதல் குறைவடைந்துள்ளது.
அத்தோடு தற்போது ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளமையால் ஒட்சிசனுடனான சிகிச்சை படுக்கைகள் போதியளவில் இருப்பில் உள்ளன. கடந்த காலங்களில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட முடியாதளவிற்கு அதிதீவிர சிகிச்சை பிரிவு பற்றாக்குறை காணப்பட்டது.
ஆனால் தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் போதியளவு இடம் காணப்படுகிறது. தடுப்பூசி வழங்கல் மற்றும் போக்கு வரத்து கட்டுப்பாடுகளினால் நாம் பெற்றுக் கொண்ட பிரதிபலன் இதுவேயாகும். இதே நிலைமையை தொடர்ந்தும் பேண வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment