கணவன் - மனைவிக்கிடையிலான பிரச்சினையை தீர்க்க பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த இளைஞருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 26, 2021

கணவன் - மனைவிக்கிடையிலான பிரச்சினையை தீர்க்க பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த இளைஞருக்கு விளக்கமறியல்

புத்தளம் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று (25) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் மனைவியின் தரப்பால் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சமாக பணம் வழங்க ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் எனவும் சந்தேக நபர், கணவனின் தரப்பினரிடம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கணவன் சார்பில் குறித்த சந்தேக நபர் கேட்ட பணத்தில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர்.

பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்ட இளைஞனின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு பணத்தைக் கொடுத்தவர்கள் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அத்துடன், தமக்கும் - சந்தேக நபருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி மூலமான உரையாடலின் ஒலிப்பதிவையும் முறைப்பாட்டாளர்கள் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த புத்தளம் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை (24) விருதோடைப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்கே நபரான இளைஞனை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை (25) புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment