இலங்கை பாராலிம்பிக் சாதனை வீரர் அனீக் அஹமட் காலமானார் - News View

Breaking

Tuesday, September 14, 2021

இலங்கை பாராலிம்பிக் சாதனை வீரர் அனீக் அஹமட் காலமானார்

புற்று நோய் காரணமாக தனது காலொன்றை இழந்த பின்னரும், விளையாட்டில் தேசிய ரீதியாக தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்த இலங்கை - கிழக்கு மாகாணம் காத்தான்குடியைச் சேர்ந்த அனீக் அஹமட் இன்று திங்கட்கிழமை காலமானார்.

2019ஆம் ஆண்டு கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்ற தேசிய பராமெய் வல்லுனர் போட்டியில் கலந்து கொண்ட அனீக் அஹமட், அதில் 3 தங்க பதக்கங்களை வென்றிருந்தார். 

உதைப்பந்து விளையாடும் போது காலில் ஏற்பட்ட உபாதை, பின்னர் புற்று நோயாக மாறியதில், 2018ஆம் ஆண்டு தனது இடது முழங்கால் வரை அனீக் இழந்தார்.

இருந்த போதும் விளையாட்டின் மீது அவருக்கிருந்த ஈடுபாடு மற்றும் பேரார்வம் காரணமாக, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய பரா மெய்வல்லுநர் வியைாட்டுப் போட்டியில் அனீக் கலந்து கொண்டு, மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். 

100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டத்திலும், நீளம் பாய்தலிலும் அவருக்கு அந்தப் பதக்கங்கள் கிடைத்தன.

புற்று நோயினால் அண்மைக் காலமாக கடுமையான வேதனையினை அனீக் எதிர்கொண்டு வந்ததாகவும், கடந்த ஜுன் மாதம் அவருக்கு சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் அவரின் இளைய சகோதர் பிபிசி தமிழிடம் கூறினார்.

தனது 10 வயதில் தாயையும், 16 வயதில் தந்தையையும் இழந்த அனீக் அஹமட், இன்று தனது 21ஆவது வயதில் அவரின் வீட்டில் மரணமடைந்தார்.

No comments:

Post a Comment