இஸ்ரேல், பலஸ்தீனத்தை போன்ற நிலையே இலங்கையிலும் காணப்பட்டிருக்கும் : அவசரகாலச் சட்டத்தினால் இராணுவ ஆட்சி தோற்றம் பெறாது - அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன - News View

Breaking

Tuesday, September 14, 2021

இஸ்ரேல், பலஸ்தீனத்தை போன்ற நிலையே இலங்கையிலும் காணப்பட்டிருக்கும் : அவசரகாலச் சட்டத்தினால் இராணுவ ஆட்சி தோற்றம் பெறாது - அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

(இராஜதுரை ஹஷான்)

30 வருட கால போர் முடிவிற்குக் கொண்டுவரப்படாமலிருந்திருந்தால் இஸ்ரேல் - பலஸ்தீனத்தினத்தை போன்றே இலங்கையும் இன்று போராடிக் கொண்டிருக்கும் என்பதை சர்வதேசம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அவசரகால சட்டம் வியாபார மாபியாக்களை கட்டுப்படுத்தவும், நாட்டு மக்களுக்கு நிவாரண அப்படையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கவும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தினால் இராணுவ ஆட்சி தோற்றம் பெறாது என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், விவசாயிகளின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் பல தீர்மானங்களை இதுவரையில் செயற்படுத்தியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நெல்லின் உத்தரவாத விலை வெறும 32 ரூபாவாக காணப்பட்டது. விவசாயிகளின் வாழ்க்கை தர முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு நெல்லின் உத்தரவாத விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பயனடைவார்கள்.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். இதன் காரணமாகவே பல இறக்கமதி பொருட்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் தேசிய மட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விவசாயத்துறையை மேம்படுத்த 14 ஆயிரம் குளங்களை புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்த காலத்திலும் இவ்வாறான தன்மை காணப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்புடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அபிவிருத்தி பணிகள் இடை நிறுத்தப்படவில்லை. ஒருபுறம் யுத்தம், மறுபுறம் அபிவிருத்தி என முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ஆட்சியதிகாரத்தை முன்னெடுத்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரம் தற்போதைய பிரதான பேசு பொருளாக உள்ளது. 30 வருட கால யுத்தம் முடிவிற்கு வராமலிருந்திருந்தால் இஸ்ரேல் - பலஸ்தீனத்தை போன்ற நிலையே இலங்கையிலும் காணப்பட்டிருக்கும் என்பதை சர்வதேசம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வியாபார மாபியாக்களை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரண அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கவும் அவரசகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவரசகால சட்டத்தின் ஊடாக இராணுவ ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.

No comments:

Post a Comment