ஆட்சியாளர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கு காரணம் : பாலித்த ரங்கே பண்டார - News View

Breaking

Tuesday, September 14, 2021

ஆட்சியாளர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கு காரணம் : பாலித்த ரங்கே பண்டார

எம்.ஆர்.எம். வசீம்

நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டு வந்த மனித நேய நடவடிக்கைகளை அரசாங்கம் கடைப்பிடிக்க தவறியுள்ளது. ஆட்சியாளர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கு காரணமாகும். ஆட்சியாளர்களின் பிழையான நடவடிக்கையால் மக்களே பாதிக்கப்படுவார்கள். அதனால் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2015 க்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தில் எமது நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு, ஐராேப்பிய ஒன்றியம் உட்பட மனித நேய இராஜ்ஜியங்களினால் பாரிய பிரச்சினை இருந்தது. அதனால் மஹிந்த ராஜபக்ஷவும் தன்னை மின்சார கதிரையில் ஏற்றப் போவதாக பிரசாரம் செய்து வந்தார். அதனால் ஐராேப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை நிறுத்தப்பட்டது.

சர்வதேச நாடுகளால் யுத்தக் குற்றத்துக்காக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதேபோல் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. உரிமைக்காக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களை நீதிமன்றம் விடுவித்த பின்னரும் சட்டத்துக்கு முரணாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டுசென்று துன்புறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறான காரணங்களால் மீண்டும் எமது நாட்டுக்கு எதிராக உலகில் பல்வேறு நாடுகள் எமக்கு எதிராக எதிர்ப்பை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளன. அதனால் நாடு என்ற வகையில், நாங்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றோம். அதனால் ஐக்கிய நாடுகளின் கோரிக்கைகளுக்கு கட்டுப்படுவதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அதற்கு எதிராக செயற்பட்டு வரவதால்தான் ஐக்கிய நாடுகள் சபை உட்பட மனித நேயம் கொண்ட நாடுகள் எமது நாட்டுக்கு எதிராக மீண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு ஆரம்பித்திருக்கின்றன. ஆட்சியாளர்களின் பிழையான நடவடிக்கைகளே இதற்கான காரணமாகும். ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் நாட்டு மக்களே பாதிக்கப்படுகின்றனர்.

எனவே ஆட்சியாளர்களின் இதுபோன்ற பிழையான நடவடிக்கைகளே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் குற்றச் சாட்டுக்களுக்கு காரணமாகும். இந்த தவறுகளை ஆட்சியாளர் திருத்திக் கொள்ளாத வரை குற்றச் சாட்டுக்களில் இருந்து எமக்கு மீள முடியாது என்றார்.

No comments:

Post a Comment