இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, September 18, 2021

இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

போலி கடவுச்சீட்டு மற்றும் இத்தாலிய குடியிருப்பு விசாவைப் பயன்படுத்தி துபாய் வழியாக இத்தாலிக்கு செல்ல முயன்ற இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (18) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய சிலாபம் மாரவில பகுதியை சேர்ந்தவர்.

சந்தேக நபர் இன்று அதிகாலை 02.10 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு புறப்பட விமானத்தில் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்திருந்தார்.

இதன்போது சந்தேக நபரான இளைஞர் சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவில் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரிகள் சந்தேக நபரின் கடவுச் சீட்டு மற்றும் இத்தாலிய குடியிருப்பு விசாவை தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்படுத்தினர். இதன்போது குறித்த இளைஞனின் புகைப்படத்திற்கு மற்றொரு நபரின் தகவல்களை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேக நபரின் பயணப் பொதியை சோதனையிட்ட போது அவருக்கு சொந்தமான கடவுச்சீட்டு மற்றும் இத்தாலி குடியிருப்பு வீசா ஆகியன குறித்த பொதியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment