தமிழ் கைதிகள் இருவரை மிரட்டிய இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் வன்மையாக கண்டிக்கிறேன் ! தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் கலாநிதி ஜனகன் - News View

Breaking

Wednesday, September 15, 2021

தமிழ் கைதிகள் இருவரை மிரட்டிய இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் வன்மையாக கண்டிக்கிறேன் ! தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் கலாநிதி ஜனகன்

இன்று தமிழ் பேசும் இளைஞர் யுவதிகள் பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக உரிய விசாரணை இல்லாமல் சிறைகளில் கைதிகளாக கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். கைதிகளின் நலனை பேணும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அமைச்சில் இராஜாங்க அமைச்சராக இருக்கும் லொகான் ரத்வத்த அவர்கள், வேலியே பயிரை மேய்தலுக்கு ஒப்பாக இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன்னால் முளங்காலில் இருக்கச் செய்துள்ளார். அதுமட்டுமன்றி தனது பாதுகாப்பு உத்தியோகத்தரின் உதவியுடன் துப்பாக்கி முனையில் அவர்களை இவ்வாறு முளங்காலில் நிற்பதற்கு வற்புறுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது. இவ்வாறான எல்லை மீறிய நடவடிக்கையை ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் எம்மால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனை தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் வன்மையாக கண்டிக்கின்றேன் என கலாநிதி வி ஜனகன் அவர்கள் தன்னுடைய அறிக்கையூடக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடும் போது, இலங்கையில் பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச்சட்டத்தினைப் பயன்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து உரிய நீதிமன்ற விசாரணைகள் ஏதும் இன்றி தடுத்துவைக்கும் செயற்பாடு ஒரு தொடர் கதையாகவே உள்ளது.

இந்நிலையில் இவ்வாறு சிறைகளில் கைதிகளாக வாடும் எமது இளைஞர்களை வன்கொடுமைக்கு ஆளாக்கும் நடவடிக்கைகள் பல மட்டங்களில் இடம்பெற்றவாறு தான் உள்ளன. ஆனால் இன்று, அதன் உச்ச கட்டமாக இலங்கையின் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் ஒருவரே இவ்வாறன இழிவான செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருவது எம்மை மேலும் வருத்தத்திற்குள் உள்ளாக்கியுள்ளது.

சர்வதேச மட்டத்தில் கைதிகளை பாதுகாக்கும் உடன்படிக்கையில் பங்காளியாக இருக்கும் இலங்கை, அந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தினை மறந்து தொடர்ச்சியாக தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர் யுவதிகளை பழிவாங்கும் கருவியாக இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்திவருகின்றது. இதனால் தான் இன்று அமைச்சர் ஒருவரே இவ்வாறன இழிவான செயலை எந்த நெருடலும் இன்றி செய்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த நடவடிக்கையை எம்மால் எக்காரணத்தின் அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நிராயுதபாணியாக சிறையில் இருந்த கைதிகள் இருவரை துப்பாகிமுனையில் முளங்கால்களில் தன்முன்னால் அமரவைத்த அமைச்சர் லொகான் ரத்வத்த அவர்கள், ஒரு ஜனநாய நாட்டின் அமைச்சராக இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார். ஆகவே அவர் தன்பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு முன்னணி தன்னுடைய கோரிக்கையை இந்த அறிக்கையினூடக வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு முழுமையாக பேணப்பட வேண்டும். இன ரீதியான இவ்வாறான வன்கொடுமைகள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாரிய சவாலாக காலம் காலமாக இலங்கையில் உள்ளது என்பதனை ஜனாதிபதி அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்த நாட்டினை கட்டி எழுப்ப அனைத்து இனங்களையும் ஒருசேர அரவணைப்பது அவரின் தலையாய கடமை என்பதனை உணர்ந்தவராக இப்படியான ஈனத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் கேட்டுக்கொள்கின்றோம் என கலாநிதி வி ஜனகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment