(எம்.மனோசித்ரா)
கொழும்பு - ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையில் இணையத்தளம் மற்றும் தொலைபேசியூடாக முன்பதிவு செய்த பின்னர் எவ்வித அசௌகரியமும் இன்றி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சீமாட்டி வைத்தியசாலை கிளை செயலாளர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சீமாட்டி வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கல் ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் 12 - 19 வயதுக்கு இடைப்பட்ட நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட அல்லது விசேட தேவையுடைய சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மாகாணத்திலும் பின்னர் ஏனைய மாகாணங்களிலும் ஆரம்பிக்கப்படும்.
இவ்வாறு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் சுமார் 34000 - 35000 சிறுவர்கள் உள்ளனர். எனவே பாதுகாப்பான பொறிமுறையொன்றின் கீழ் இந்த தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சீமாட்டி வைத்தியசாலையில் வைத்தியசாலையின் இணையத்தளம் ஊடாகவும், பொது தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் முன்பதிவு செய்து அதன் போது வழங்கப்படும் நேரத்திற்கு அமைய தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதனை பின்பற்றுவதன் மூலம் பெற்றோரும் பிள்ளைகளும் வீணாக நீண்ட நேரம் காத்திருந்து அல்லது நேரத்திற்கு முன்னதாகவே வைத்தியசாலைக்கு வருகை தந்து அசௌகரியத்திற்கு உள்ளாகத் தேவையில்லை.
சீமாட்டி வைத்தியசாலையில் அன்றி வேறு வைத்தியசாலைகளில் சிக்சை பெறும் சிறுவர்கள் குறிப்பிட்ட விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரை கடிதத்துடன் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment