நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் கைக்குண்டுகள் மீட்பு : சிறப்பு விசாரணைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் கைக்குண்டுகள் மீட்பு : சிறப்பு விசாரணைகள் ஆரம்பம்

(எம்.எப்.எம்.பஸீர்)

நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டிக்குள் இருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டுகள் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சரின் கீழ் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீர் கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமன் சிகேராவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் அத்தியட்சர் நாலக சேனநயக்கவின் கீழ் இந்த சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சுமார் 8 இற்கும் அதிகமான வாக்கு மூலங்கள் இன்று மாலையாகும் போதும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அலுவலக வளாகத்துக்குள் கைக்குண்டுகள் எவ்வாறு எடுத்து வரப்பட்டன என்பது தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், பொலிஸ் அத்தியட்சர், உதவி பொலிஸ் அத்தியட்சர், வலய குற்றத் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட சில வலய விசாரணைப் பிரிவுகள் குறித்த வளாகத்திலேயே அமைந்துள்ள நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்ன் உத்தியோகபூர்வ இல்லமும் அவ்வளாகத்திலேயே அமைந்துள்ளது.

இரு நாட்களுக்கு ஒரு முறை அவ்வளாகத்தில் சேறும் குப்பைகள் அகற்றப்படும் வழமையாகும். இந் நிலையில் கடந்த 20 ஆம் திகதியில் இருந்து நேற்று (22) வரை நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சேர்ந்த குப்பைகளை அகற்றுவதற்கு முயன்றபோது, நீர்கொழும்பு நகர சபையின் ஊழியர் ஒருவர் இந்த கைக்குண்டுகளை அவதானித்து பொலிசாருக்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் ஊடகவும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு ஊடாகவும் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இரண்டு கைக்குண்டுகளை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் அவை கையளிக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு மேலதிக நீதவான் சம்பிக்க ராஜபக்ஸ பிறப்பித்த உத்தரவிற்கு அமையவே அவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசாரணைகளில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வளாக சி.சி.ரி.வி. காணொளிகள் பரிசீலனை செய்யப்பட்ட போதும் அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிசார் கூறினர்.

எவ்வாறாயினும் குறித்த வலாகத்தில் சி.சி.ரி.வி. கமராக்கள் செயற்படாத பகுதி ஊடாக கைக்குண்டு கொண்டுவரப்பட்டதா எனவும் சந்தேகம் நிலவுகிறது. அதன்படி இந்த கைக்குண்டு விவகாரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தின் உள் வீட்டு விவகாரமா எனவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment