இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி; ஒன்றரை வருடத்தின் பின் தொடர் வெற்றி : 125 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா : புது முக வீரர் மஹேஷ் தீக்‌ஷண 4 விக்கெட்டுகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 7, 2021

இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி; ஒன்றரை வருடத்தின் பின் தொடர் வெற்றி : 125 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா : புது முக வீரர் மஹேஷ் தீக்‌ஷண 4 விக்கெட்டுகள்

சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அந்த வகையில் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2-1 என வெற்றி கொண்டுள்ளது. அத்துடன் கடந்த 2020 பெப்ரவரிக்கு பின்னர் இலங்கை அணி வெற்றி கொள்ளும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது. தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 204 ஓட்டங்களை நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 47 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களையும் துஸ்மந்த சமீர இறுதியில் தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு அதிரடி காட்டி 29 ஒட்டங்களையும் பெற்றதே கூடுதலான ஓட்டங்களாகும். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

தென்னாபிரிக்க அணி சார்பாக அணியின் பதில் தலைவர் கேஷவ் மஹராஜ் 3 விக்கெட்டுக்களையும் ஜோர்ஜ் லின்ட் இரண்டு விக்கெட்டையும் முல்டர் ,மார்கம் தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

அதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 30 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவிக் கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் ஆகக்கூடுதலாக அவ்வணியின் விக்கெட் காப்பாளர் ஹெயின்ரிச் க்ளசன் 22 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். ஜென்னமென் மாலன் 18, ஜோர்ஜ் லிண்டே 18, அணியின் தலைவர் கேஷவ் மஹராஜ் 15 ஓட்டங்களைப் பெற்று கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் இன்றைய போட்டியில் அறிமுகமான புது முக வீரர் மஹேஷ் தீக்‌ஷண 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். துஷ்மந்த சமீர மற்றும் வணிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இலங்கையுடன் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுப்பர் லீக்கிற்காக 3 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் மூன்று 20க்கு20 போட்டிகள் கொண்ட தொடர்களிலும் ஆட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இப் போட்டிக்கான இலங்கை அணியில், சுழல்பந்துவீச்சாளரான மகீஷ் தீக்ஷன சர்வதேச அறிமுகம் பெற தினேஷ் சந்திமால் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இரு அணிகளும் மோதும் முதலாவது 20க்கு 20 போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி வௌ்ளிக்கிழமை ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறும்.

No comments:

Post a Comment