கொழும்பு - காக்கைதீவில் கரையொதுங்கிய ஆணின் சடலம் : 6 இராணுவத்தினரும், பெண் கிராம சேவகரும் சிக்கினர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

கொழும்பு - காக்கைதீவில் கரையொதுங்கிய ஆணின் சடலம் : 6 இராணுவத்தினரும், பெண் கிராம சேவகரும் சிக்கினர்

(எம்.எப்.எம்.பஸீர்)

மட்டக்குளி - காக்கை தீவு கடற் கரையில், முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விஷேட விசாரணைகளில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் உள்ளிட்ட 6 இராணுவத்தினரும் மட்டக்குளி பிரதேசத்தின் கிராம சேவகரான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்ட நபர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிராம சேவகரின் கணவர் எனவும், அவர் 40 வயதுடைய எல்லை வீரர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி இராணுவ முகாமில் கடமையாற்றிய, புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் உள்ளிட்ட 6 பேரை இராணுவ பொலிஸ் பிரிவு கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைந்திருந்து. இந்நிலையில் பொலிஸார் பெண் கிராம சேவகரைக் கைது செய்திருந்தனர்.

இவ்வாறான நிலையில், நேற்று குறித்த பெண் கிராம சேவகரையும், இராணுவ புலனாய்வு கோப்ரலையும் மட்டும் கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் ஆஜர் செய்த பொலிஸார், அவர்களை 7 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஏனைய 5 இராணுவத்தினரும் நேற்று மலை வரை மன்றில் ஆஜர் செய்யப்படாத போதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்களை இன்று (14.09.2021) மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்ரகுமார, கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தெஹிதெனிய ஆகியோரின் மேற்பார்வையில் கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நலின் பிரியந்த தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி, முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் , மட்டக்குளி - காக்கை தீவு கடற் கரையில் ஒதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

அது தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவுக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிவான் நீதிமன்ற விசாரணைகளும் இடம்பெற்றன. இது தொடர்பில் இடம்பெற்ற மேலதிக விசாரணைகளிலேயே, அது ஒரு கொலை என தகவல்கள் வெளிபப்டுத்தப்பட்டு, தற்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment