மன்னார் மாவட்டத்திற்கு மின் தகன நிலையம் அமைக்க 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு : நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 2, 2021

மன்னார் மாவட்டத்திற்கு மின் தகன நிலையம் அமைக்க 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு : நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம்

மன்னார் மாவட்டத்திற்கு என மின் தகன நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த மின் தகன நிலையம் அமைப்பதற்காக மன்னார் நகர சபையால் 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் இன்று (2) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடலங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில், வவுனியா கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டு வருகின்றது.

இதனால் மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையம் ஒன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக மன்னார் மாவட்டச் செயலாளர் தலைமையில் அண்மையில் அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதோடு, மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக நிதி உதவி கோரப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை (1) மன்னார் நகர சபையில் விசேட கூட்டமொன்றினூடாக கலந்துரையாடப்பட்டு, மன்னாரில் அமைக்கப்படவுள்ள மின் தகன நிலையத்திற்கு 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது என சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்போடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மன்னாரில் தற்போதைய கொரோனா தொற்று காரணமாக பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அவசர நிலையை கருத்தில் கொண்டு மன்னார் நகர சபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது 50 இலட்சம் ரூபாய் நிதி மன்னாரில் மின் தகன நிலையம் அமைக்க ஒதுக்கியுள்ளோம்.

மேலும் பொது அஞ்சலி மண்டபம், சடலம் எரியூட்டும் இடத்திற்கு அருகாமையில் கிரியைகளை செய்வதற்கு தேவையான மண்டபம் மற்றும் மலசல கூடங்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த வேலைத்திட்டங்கள் சில நாட்களில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையம் அமைக்க 30 மில்லியன் ரூபா நிதி தேவை என தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் நகர சபை குறித்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment