மட்டக்களப்பு மாவட்டத்தில் 43 பேருக்கு டெல்டா தொற்று : கொரோனாவுக்கு 10 வயது சிறுவன் பலி - வைத்தியர் நாகலிங்கம் மயூரன் - News View

Breaking

Wednesday, September 8, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் 43 பேருக்கு டெல்டா தொற்று : கொரோனாவுக்கு 10 வயது சிறுவன் பலி - வைத்தியர் நாகலிங்கம் மயூரன்

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 பேருக்கு டெல்டா தொற்று உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்டா வேரியன்கள் இருக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அதேநேரம், குறித்த மாதிரிகளில் 4 பேருக்கு அல்பா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 193 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நான்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவற்றில் 10 வயது சிறுவன் ஒருவன் வவுணதீவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் மயூரன் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்களை சமூக பொறுப்புடன் செயற்படுமாறும் அனைவரையும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்த பணிப்பாளர் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment