இன்று ஆரம்பமாகவிருந்த பாகிஸ்தானுடனான போட்டியிலிருந்து விலகியது நியூஸிலாந்து : 3 ஒரு நாள்; 5 ரி20 போட்டித் தொடர்கள் முழுமையாக இரத்து - News View

About Us

About Us

Breaking

Friday, September 17, 2021

இன்று ஆரம்பமாகவிருந்த பாகிஸ்தானுடனான போட்டியிலிருந்து விலகியது நியூஸிலாந்து : 3 ஒரு நாள்; 5 ரி20 போட்டித் தொடர்கள் முழுமையாக இரத்து

பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இன்றையதினம் (17) ஆரம்பமாக இருந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து நியூஸிலாந்து அணி விலகிக் கொண்டுள்ளது.

நியூஸிலாந்து அதிகாரிகளுக்கு கிடைத்த பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நியூஸிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வந்த நியூஸிலாந்து அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 ஒரு நாள் மற்றும், 5 ரி20 தொடர் பாதுகாப்பு காரணங்களால் முழுமையாக இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த தகவல் எவ்வாறானது என்பது தொடர்பில் கருத்து வெளியிட முடியாது எனத் தெரிவித்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் சபை, கிடைக்கப் பெற்றுள்ள தகவலுக்கமைய கிரிக்கெட் தொடரில் பங்குபற்ற முடியாது என தெரிவித்துள்ளதுடன், இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி நாடு திரும்ப திட்டமிட்டுள்ளது.

ஆயினும் தமது நாட்டில் அவ்வாறான எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என தம்மால் உறுதிபட கூற முடியுமென தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அணிக்கு உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுடன் இது தொடர்பில் விளக்கமளித்ததாகவும், மிகச் சிறந்த புலனாய்பு பிரிவு தம்மிடம் இருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டியதாகவும் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பாகிஸ்தானிலுள்ள கிரிக்கெட் இரசிகர்கள் மாத்திரமன்றி உலகிலுள்ள அனைத்து இரசிகர்களுக்கும் இந்த இறுதி நேர முடிவானது ஏமாற்றத்தை அளித்துள்ளதாக சபை விடுத்துள்ள ட்விற்றர் இடுகையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment