முஸ்லிம் தனியார் சட்டம்; நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வுக்கு சிவில் சமூக கூட்டமைப்பு நம்பிக்கை : வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசியத் தலைவர் வழங்கிய செவ்வி - News View

About Us

About Us

Breaking

Friday, September 17, 2021

முஸ்லிம் தனியார் சட்டம்; நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வுக்கு சிவில் சமூக கூட்டமைப்பு நம்பிக்கை : வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசியத் தலைவர் வழங்கிய செவ்வி

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் தொடர்பில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம்.ரிஸ்மி தினகரனுக்கு வழங்கிய செவ்வி.

கே: இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பிலான பேச்சுக்களும் கருத்துக்களும் சில காலம் பேசுப்படும், பின்னர் கிடப்பிலே போடப்படும்.ஆனாலும் அண்மையில் இவ்விவகாரம் சற்று சூடுபிடித்திருக்கின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து?

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு பரம்பரை பரம்ரையாக இருந்து வந்த காதி நீதிமன்ற சட்ட சீர்திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விடும் என்ற அச்ச நிலை தோன்றியுள்ளது.

முஸ்லிம் சமூகம் தங்களுடைய விவாகம் விவாகரத்து விடயங்களை மாவட்ட நீதி மன்றங்களில் சமர்ப்பித்து நீதி கேட்க வேண்டுமென்ற சில பரப்புரைகள் பரப்பப்படுகின்றன.

எனினும் இதன் வரலாற்று ரீதியிலான பிரச்சினைகள் அல்லது அதனை உரிய காலத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியாமை போனமைக்கான அடிப்படைக் காரணங்கள் மற்றும் அவற்றுடன் புதைந்திருக்கும் யதார்த்தங்களை கண்டறிந்து கொள்வதற்கான தேவைப்பாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையான தீர்வொன்றுக்கு கவனத்தைச் செலுத்துவதன் மூலமே சரியான முறையில் நியாயமான காதி நீதிமன்ற சட்ட சீர்திருத்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் தற்கால அரசியல் சூழலை கருத்திற் கொண்டு பொறுப்பு வாய்ந்த அமைச்சர் தலையில் போடாமல் ஏனைய அரச அமைச்சரவைக் குழுவினர்களிடம் நியாயத்தை விளக்கிக் கூறி அதனை உள்வாங்கச் செய்து நீடித்து நிலைத்திருக்கும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் அமைச்சரவைக் குழுவில் விவாதிக்கப்பட்டு சட்ட வல்லுனரிடம் இருக்கின்றது. அவர் அதனை வர்த்தமானியில் வெளியிட்டதன் பின்னர் மீண்டும் ஒரு முறை அமைச்சரவைக் குழுவில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு மீளவும் வர்த்தகமானியில் பிரசுரம் செய்யப்படும். அதற்குப் பிறகு தான் பாராளுமன்ற விவாதத்திற்கு வரும்.

அந்த வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதனை சவாலிடவும் முடியும். எனவே இது முடிந்து விட்ட விடயமல்ல.நமக்கு நேரம் காலம் இருக்கிறது.எனவே இது பற்றி முஸ்லிம் மக்கள் அனைவரும் தெளிவாக சிந்தித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.முதலாவதாக காதிநீதிமன்றங்கள் ஏன் அமைக்கப்பட்டன என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

கே: முஸ்லிம் தனியார் காதிநீதிமன்றத்தின் பயன் என்ன?

காதிநீதிமன்றங்கள் எல்லாம் விவாகரத்துக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல.இதன் முதல் பணி திருமணத்தில் பிணக்குகள் ஏற்படும் போது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். அவர்களை சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்து வைக்கின்ற பணிகளையே செய்கின்றன.

அதுவும் இயலாத பட்சத்தில் விவாகரத்து நேர்ந்தால் இஸ்லாமிய முறைப்படி கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளைத் தீர்த்தல், பிள்ளைப் பராமரிப்புக்காக கட்டணங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொடுப்பதே இதன் பிரதான பணியாகும்.ஆனாலும் ஒரு சில காதிநீதிமன்றங்கள் சரியாக செயற்பட வில்லை என்பது உண்மை.

இதனால் சில பெண்கள் ஆண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது நாம் அறிந்த உண்மை. ஆனாலும் எல்லோரும் தவறு இழைப்பவர்களோ அல்லது முஸ்லிம்களுக்கு கொடுமை செய்பவர்களோ அல்ல. இந்த காதிநீதிமன்றங்கள் ஆரம்ப முதல் இன்று வரையிலும் சீர்திருத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அல்லாஹ்தஅலாவுக்குப் பயந்து அறிவுடன் இஸ்லாமிய மார்க்க விழுமியங்களை உணர்ந்து சேவை செய்யப்படுகின்றன.

கே: தனியார் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட மூலத்தில் காணப்படும் குறைபாடுகள் என்ன?

இதில் எந்தவிதமான பாரிய குறைபாடுகளும் இல்லை.காதிநீதிமன்றங்களில் சில பிரச்சினைகள் இருக்கின்றன.சிலர் தவறு செய்திருக்கலாம்,இலஞ்சம் வாங்கியிருக்கலாம், பெண்களை அலைக்கழித்திருக்கலாம் வழக்குகளை காலம் தாழ்த்தி போட்டிருக்கலாம் போன்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

ஆனால் எல்லா காதிநீதிமன்றங்களிலும் அவ்வாறு நடப்பதில்லை. இந்த விவகாரம் தொடர்பில் மிக நீண்ட வருடங்களாக சட்ட வரைபுகளை மேற்கொண்டு வரும் சட்டத்துறை அறிஞர்களோடும், காதிநீதிபதிகளோடும் மற்றும் அவை தொடர்பில் ஈடுபாடு காட்டும் எமது வை. எம். எம். ஏ. பேரவையின் முக்கியஸ்தர் என்ற வகையிலும் அது தொடர்பில் நன்கு அறிந்தவன் என்ற வகையில் அதனை விமர்சனம் செய்வதற்கும் குறைபாடுகளும் இல்லை என்பதை என்னால் அழுத்தம் திருத்தமாக கூற முடியும்.

விவகாரத்து என்று வரும் போது மூன்று அல்லது நான்கு மாதங்களில் விசாரணை செய்து சிறப்பான கண்காணிப்புடன் தீர்ப்பு வழங்கப்படும்.காதிநீதிமன்றங்களில் பிழைகள் நடந்திருந்தால் காதிநீதிமன்ற ஆணைக்குழு என்று சொல்லுகின்ற சுயாதீனமான குழு நீதி அமைச்சுக்கு கீழே தான் இருக்கிறது.எனவே பிழை செய்பவர்களை தடுப்பதற்கான அதிகாரம் நீதி அமைச்சுக்கு உள்ளது.

கே: இந்த விவகாரம் தொடர்பில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை முன்னெடுக்கும் வேலைத் திட்டம் என்ன?

2020 - 12- 31 ஆம் திகதி நீதி அமைச்சர் அலி சப்ரியினால் வக்பு சபைத் தலைவர் சப்ரி ஹலீம்டீன் தலைமையில் சீர் திருத்தக் குழு நியமிக்கப்பட்டது. குறிப்பிட்ட சீர்திருத்தக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட முன்னரே 2021 -03-08 ஆம் திகதி பலதார திருமணம், காதிநீதிமன்ற முறைமை தடை செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து 21-06- 2021 ஆம் திகதி சீர்திருத்தக் குழுவினர் அறிக்கையினை நிறைவு செய்து கையளித்தார்கள். எனினும் அமைச்சரவையில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டதை அடுத்து சீர்திருத்தக் குழுவில் இருந்து அதற்கான எதிர்ப்புக்கள் எழுந்தன.அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் செயலாளர் மௌலவி அர்கம் நூருல் அமீன், சட்டத்தரணி ரிஸ்கி ஹபீப் ஆகியோர் சீர்திருத்தக் குழுவில் இருந்து வெளியேறினர்.அவர்கள் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு எதிராக வெளியேறினார்கள்.

அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாத சிவில் அமைப்புக்கள் சமூக அமைப்புக்கள், பிரசார அமைப்புகள் எல்லோரும் இந்த விவகாரத்தில் மீண்டும் ஒன்றுபட்டு இது சம்பந்தமாக அனைவரும் கலந்துரையாடி அமைச்சரவையின் தீர்மானத்திற்கு முகம்கொடுத்து எதிர்ப்புத் தெரிவிக்கின்ற விடயத்தில் முனைப்புடன் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இவ்வேளையில் ஜம்மிய்யதுல் உலமாவும் வை. எம். எம். ஏ இயக்கமும் ஒரே நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தன. எனினும் குறிப்பாக ஜம்மிய்யதுல் உலமா ஒரு விடயத்தில் மாத்திரம் அதாவது பெண்கள் காதியைநியமிக்கக் கூடாது என்று கூறி வருகிறது. ஆனால் வை. எம். எம். ஏ. பெண்கள் காதியைநியமிக்கலாம் என்று கூறுகிறது. அது மூன்று பேர் கொண்ட ஒரு யூரி சபையினை உருவாக்கி ஒரு குழுவில் இரண்டு பெண்ணையும் ஒரு ஆணையும் சேர்த்து குழுவாக அமைக்க வேண்டும் என்ற ஒரு வரைபினை வை. எம். எம். ஏ இயக்கம் கொடுத்திருந்தது. அந்த கருத்திலேயே தொடர்ந்தும் இருந்து வருகிறது.

கே: சமகாலத்தில் உங்கள் அமைப்பு எடுத்துள்ள நடவடிக்கைகள்?

சிவில் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்று பட்டு அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்தல் வேண்டும். அதற்கான முயற்சிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புக்களுடன் சேர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்த விவகாரம் குறித்து சமூகத்திற்கு பதலளிக்கும் கடப்பாடும் பொறுப்புக் கூறலும் சிவில் சமூகத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. அந்த நெறிமுறையினை உணர்ந்து சளைக்காமல் வெற்றி கிடைக்கும் என்ற உறுதியுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அதேவேளை அரச தரப்பினர்கள் மத்தியில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த கூடிய சமிக்ஞையினை நீதி அமைச்சர் அலி சப்ரி சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காணொளியினை பார்த்த போது அதில் நல்லதொரு சமிக்ஞை தென்படுகிறது. நீடித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு நியாயபூர்வமான தீர்வையும் தமது காலத்தில் காலம் தாழ்த்தாமல் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தமது உறுதியான நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

கே: இது தற்செயலாக கை கூடாமல் போனால்?

முஸ்லிம்களுடைய தனியார் சட்ட முறைமையினை அவர்கள் மாற்றுவார்களாயின் குறிப்பாக முஸ்லிம் விவாக, விவகாரத்து விடயங்களில் பொது நீதி மன்றங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.ஏற்கெனவே ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக கிடைக்கப் பெற்றிருந்த சேவையை பெரும் பணம் செலுத்தி முடிக்க வேண்டி வரும்.

காதி நீதிமன்றங்களுக்குச் சென்று குறுகிய காலத்தில் முடித்துக் கொள்ள வேண்டிய வழக்குகள் எல்லாம் வருடக் கணக்கில் இழுபடும் நிலைமை ஏற்படும்.

இது பொது நீதி மன்றத்திற்கு செல்லும் போது அந்த வழக்கிற்கு மனுத் தாக்கல் செய்ய மட்டும் ரூபா 25,000 செலவாகும். வருடக் கணக்கில் வழக்குகள் செல்லும். ஒவ்வொரு வருடமும் பணம் செலவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் இரகசியங்கள் எல்லாம் பகிரங்கமாக பேச வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும். இதுதான் நாம் எதிர்கொள்ளக் கூடிய பாரிய விளைவுகள்.நீதிமன்றங்களில் வாதப்பிரதிவாதங்கள் ஆராயப்படுமேயன்றி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை. இப்படி பலதரப்பட்ட பிரச்சினைகளை நாங்கள் எதிர்நோக்க வேண்டி வரலாம்.

எனவே நாங்கள் அனைவரும் கருத்து முரண்பாடுகளைத் தவிர்த்து சில விட்டுக் கொடுப்புகளுடன் முஸ்லிம் சமூகத்திற்குப் பாதகமில்லாமல் நீதியை நிலைநாட்ட தேவையான நிறுவன ரீதியிலான மாற்றங்களை செய்ய அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டி இருக்கிறது.

கே: அரச தரப்பினரின் தற்போதைய கருத்து என்ன?

ஜனாதிபதிக்கு ஒரு மகஜர் கையளித்ததுடன் மேலும் நாங்கள் இது தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்களைச் சந்தித்தோம்.நீதி அமைச்சரும் ஆதரவளித்தால் ஒரு சாதகமான முடிவை இலகுவில் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம். எனவே இந்த நாட்டில் எப்பொழுதும் சட்டத்தைப் பின்பற்றி நடக்கக் கூடிய ஒரு சமூகமாகவே நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு நல்லிணக்கப்பாட்டின் மூலமாக குர்ஆன் ஹதீஸ் வழிமுறைகளுக்கு ஏற்ப உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் எவ்வாறாவது போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.

ஆயினும் நாங்கள் வித்தியாசமான போராட்டங்களை நடத்தக் கூடியவர்கள் அல்லர். முஸ்லிம்கள் எப்பொழும் சாத்வீகமான மிக அமைதியான முறையில் பொறுமையுடன் எதனையும் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றவர்களாகவே இருந்து வருகின்றனர். விசேடமாக ஹூதைபியா உடன் படிக்கையினை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.நாங்கள் இந்த விடயத்தைக் கையாளும் போது எமக்கு சாதகமான பேறுபேற்றை ஏற்படுத்த உதவும் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

கே: இந்த விவகாரம் தொடர்பில் முன்னிலையில் இயங்கும் பிரதான சிவில் அமைப்புக்கள் குறித்து கூறுவீர்களா?

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் செயலாளர் மௌலவி அர்கம் நூருல் அமீன், வை. எம். எம். ஏ. பேரவை பிரதிநிதிகளான தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, முன்னாள் தலைவர் கே. டீன், செயலாளர் சாபித் சவாத், முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநிதிகளான என். எம். அமீன், ஹில்மி அஹமட், சூறா கவுன்சிலின் பிரதிநிதிகளான டி. கே. அசூர், ஜாவிட் யூசுப், அல் முஸ்லிமாத் பெண்கள் அமைப்பின் பிரதிநிதி டொக்டர் மரீனா தாஹா முதலிய அமைப்புக்கள் சார்ந்த பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து “சிவில் சேவிஸ் எலைன்ஸ் ” சிவில் சமூக கூட்டமைப்பு என்ற ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

அக்கூட்டமைப்புக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவை தலைவராக நியமித்துள்ளோம்.அவருடைய தலைமையில் முயற்சிகளை மேற் கொண்டுவருகின்றோம். கிவ். சீ. கனகரட்ணம் குழு, டொக்டர் பாரூக் குழு, டொக்டர் சஹாப்தீன், நீதியரசர் சலீம் மர்சூக் போன்றவர்களால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவருவதற்காக கடந்த 70 வருடங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கே: இது ஏன் இவ்வளவு காலமும் கவனத்தில் கொள்ளப்பட வில்லை.இப்பொழுது அமைச்சர் அலி சப்ரி- காலத்தில் மட்டும் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது என்பது பற்றி?

அமைச்சரவையில் முன் வைத்துள்ள அறிக்கைக்கு எதிராக எவ்வாறு செயற்படுவது என்பது பற்றி பல முறை அமர்ந்து சிவில் அமைப்பைச் சார்ந்த பல புத்திஜீவிகள், துறை சார்ந்தவர்க​ளை கொண்டு பல்வேறுபட்ட கலந்துரையாடல்களை நடாத்தி முதன் முதலில் அமைச்சரை சந்தித்து அவரிடம் இது சம்பந்தமாக ஒரு புரிந்துணர்வோடு இந்த விடயத்தை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என்று பேசினோம்.

இந்தக் கலந்துரையாடலின் போது இறுதியாக எல்லா விடயங்களும் என்னுடைய கையில் இல்லை.அமைச்சரவையில் 30 பேர் இருக்கின்றார்கள் நான் மட்டும் தான் முஸ்லிம். முடியுமாக இருந்தால் சிரேஷ்ட அமைச்சர்கள், ஜனாதிபதி, பிரதமர் இது போன்ற தூதுவர்களைச் சந்தித்து இதன் மூலமாக கலந்துரையாடி ஏதோ ஒரு வகையில் நீங்கள் அழுத்தத்தைக் கொடுத்து முயற்சி செய்யுங்கள் என்று எங்களிடம் அவர் கூறிய அறிவுரைக்கு இணங்க நாங்கள் பாகிஸ்தான் தூதுவரைச் சந்தித்தோம்.

எவ்வாறாயினும் நாங்கள் அவர்களுடைய முறைமையோடு திட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாங்கள் உடன்பட்ட பல விடயங்கள் இருந்தன. ஆனாலும் பலதார திருமணத்தை தடை செய்தல், காதி முறைமையில் சிலவற்றை நீக்குவது தொடர்பில் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது.

நல்லாட்சி அரசாங்கத்தில் இந்தப் பிரச்சினையை அன்றே தீர்த்து இருக்கலாம். ஆனால் அன்று இருந்த அரசியல்வாதிகளால் முடிக்க இயவில்லை. அன்று பாராளுமன்ற குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களுக்கிடையே உடன்பாடும் ஒற்றுமையும் இல்லாமல் ஒரு இறுதித் தீர்மானத்திற்கு வரமுடியவில்லை. அன்று இருந்த பிரதமர் இதற்கு சரியான ஒத்துழைப்பு வழங்க வில்லை என்பதுதான் உண்மை.

பலமான அரசு இருந்த காலகட்டத்தில் இந்த விடயத்தை அன்றே தீர்த்து இருக்க வேண்டும். அதற்கு இன்றுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் தான் பொறுப்புக் கூற வேண்டும். இன்றைய அரசின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டிற்கு கீழே முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு கவனம் செலுத்தப்பட்டது.

கே: முஸ்லிம் தனியார் சட்ட வரைபில் வை. எம். எம். ஏ. மேற்கொண்ட முயற்சி?

நீதி அமைச்சர் அலி சப்ரியை வை. எம். எம். ஏ. குழுவி சந்தித்து முஸ்லிம் விவாகம் விவாகரத்து சம்பந்தமாக தீர்வு காணும் விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

நாங்கள் தயாரித்த அறிக்கையை அவரிடம் கையளித்தோம்.அதில் ஒரு சில விடயங்களை அடையாளம் காட்டி மக்களுடன் கலந்துரையாடி சீர்திருத்தி மூன்று மாதத்தில் அவர் கைளிக்கச் சொன்னார்.சற்று தாமதித்து அந்த அறிக்கையை நாங்கள் கையளித்தோம். உரிய அறிக்கையிலே மிக அழகான முறையில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் வை. எம். எம்.ஏ இன் வரைபு அவரிடம் கையளிக்கப்பட்டது.

அதற்கிடையே இந்த சீர்திருத்தத்தை செய்வதற்காக 31-12-2020 நீதி அமைச்சர் அலி சப்ரியால் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்டீன் தலைமையில் ஒரு சீர்திருத்தக் குழு நியமிக்கப்பட்டது.அதில் திருமண வயதெல்லை,திருமணப்பத்திரத்தில் பெண் கையொப்பமிடுதல்,பெண் காதி தொடர்பில் ஆராய குழுவுக்கு பணிக்கப்பட்டது.

அந்தக் குழுவிலே வை. எம். எம்.ஏயால் கையளிக்கப்பட்ட அறிக்கையையும் ஜம்மிய்யதுல் உலமா சபையின் அறிக்கையையும் அமைச்சர் நியமித்த குழுவால் ஆராயப்பட்டதாக எங்களுக்கு தெரியவந்தது.

கே: இஸ்லாமிய சட்ட திட்டம் தொடர்பான வரலாறு?

100 வருடங்களுக்கு முன்னர் இருந்து முஸ்லிம் சமூகம் அனுபவித்து வந்த குறிப்பாக ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இருந்தே ஒல்லாந்தர் காலத்திலேயே இலங்கை முஸ்லிம்கள் கலாசாரம் மற்றும் மரபு ரீதியான இஸ்லாமிய சட்ட திட்டங்களைப் பின் பற்றி வந்தார்கள். ஆரம்பத்தில் இந்தோநேசியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அல் பகாயா என்ற ஒரு முறைமையைப் பின் பற்றி வந்தாலும் காலப் போக்கில் ஆங்கிலேயர் வருகையோடு 1806 ஆம் ஆண்டிற்கு பின்னர் முஹம்மதிய்யன் சட்டம் என்று இருந்தது . அதன் கீழ் எங்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன. பின்னர் 1929 ஆம் ஆண்டுகளுக்குப் பிற்பட்ட காலத்தில் சென்ரல் மெரேஜ் ஓடியன்ஸ் இந்த முறைமைகளின் ஊடாக ஒரு சட்ட திட்டம் 1929 ஆம் ஆண்டு இலங்கையில் கொண்டு வரப்பட்டாலும் அதனடிப்படையில் எங்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட்டு மரபு ரீதியாக அந்த உரிமைகளை நாங்கள் அனுபவித்து வந்தோம்.

முன்னோர்களான ஜஸ்டிஸ் அக்பர், டி. பி. ஜாயா, எம். எல். எம். ஹனிபா போன்ற

பெருந்தலைவர்கள் தொடர்ச்சியாக எடுத்த முயற்சியின் காரணமாக 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் தனியார் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.அதில் விவாகம், விவாகரத்து பராமரிப்பு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற முறையும் வழங்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் உலக நாடுகளிலும் இதே முறைமைகள் மிகவும் சிறப்பாக பின்பற்றக் கூடிய நிலையிலேயே உள்ளன.ஆனால் காதி முறைமை குடும்ப பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் மரபு ரீதியாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.

64 காதி நீதிமன்றங்கள் இந்நாட்டில் உள்ளன. இருந்தாலும் காலத்திற்கு காலம் ஒரு சில குறைபாடுகள் பேசப்பட்டு வந்திருக்கின்றன. அந்தந்த கால கட்டத்தில் அவ்வப்போது நீதிச் சேவை ஆணைக்குழு தேவைக்கு ஏற்ப தகுதி வாய்ந்தவர்களை தெரிவு செய்வதற்கு தவறியிருக்கின்றது.

அதன் காரணமாக ஒரு சில காதி மார்கள் செய்யக் கூடிய பிழைகளால் காதி நீதிமன்றங்கள் மீது குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன.இதனால் பல விவாதங்களும் ஆய்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அனைவரும் இருந்தார்கள்.

1956 ஆம் ஆண்டில் இருந்து பல குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு ஆலோசனைகளும் ஆய்வுகளும் செய்து வந்தார்கள். குறிப்பாக பாரூக் கமிட்டி, சஹாப்தீன் கமிட்டி என்று ஆரம்ப காலத்திலே இருந்த இந்த குழுக்களுக்கும் 2008 வரையிலும் எந்தவிதமான தீர்மானமும் எடுக்க முடியாமல் போனமை மக்களின் ஒத்துழைப்பின்மையினால் ஆகும்.

எனவே 2009 ஆம் ஆண்டு இருந்த நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட ஒரு குழுவை அமைத்தார்.நீதியரசர் சலீம் மர்சூக் தலைமையில் மிக நீண்ட வருடத்திற்கு பிறகு 2018 ஆம் ஆண்டு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.ஆனால் அந்தக் குழுக்குள்ளே அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ளாத பல முரண்பாடுகள் ஏற்பட்டன.10 அம்சங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டன. திருமண வயதெல்லை. காதி நீதிபதிகளின் தெரிவு,பெண்காதி நியமனம், மணப்பெண் பத்திரத்தில் கையிடுதல் போன்றன.இறுதியாக அந்தக் குழு இரண்டாக பிளவுபட்டது.சலீம் மர்சூக் தலைமையிலும் ஒரு குழுவும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தாபாவை தலைவராகக் கொண்ட குழுவும் ஜம்மிய்யல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி தலைமையில் இன்னுமொரு குழுவும் ஆரம்பிக்கப்பட்டது.அந்த குழுக்களுக்கிடையே காணப்பட்ட பிளவுகளை அடையாளம் கண்ட வை. எம். எம். ஏ பேரவை, முரண்பாடுகளை உடன்பட வைப்பதற்காக 2018-09-10 ஆம் திகதி மென்டரினா ஹோட்டலில் ஒரு கருத்தரங்கை நடத்தியது.

அதில் 136 பேர் கலந்து கொண்டிருந்தனர். சட்டத்தரணிகள்.உலமாக்கள். காதிமார்கள், துறைசார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.அந்தக் கருத்தரங்கில் இன்றைய நீதி அமைச்சர் அலி சப்ரி பிரதான பேச்சாளராக கலந்து கொண்டார்,அன்று இருந்த உடன்பாடுகளுக்கு முரண்பட்டவர்களை உடன்பட வைப்பதற்கு அவர் செயற்பட்டார்.அந்தக் கருத்தரங்கு வை. எம். எம். பேரவையின் முன்னாள் தலைவர் கே. டீன் தலைமையில் நடைபெற்றது.இன்றைய தலைவர் அன்று செயலாளர். இன்றைய செயலாளர் சட்டத்தரணி சாபீர் சவாத்தும் இருந்தார். ஒருங்கிணைப்பாளர் குழுவில் முன்னாள் சவூதி அரேபியாவின் தூதுவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஜாவிட் யூசுப் அக்கருத்தரங்கை நடத்தினார். ஓரளவு உடன்பாடுகள் எட்டப்பட்டாலும். அந்த இரண்டு குழுக்களுக்கிடையே ஒரு சில முரண்பாடுகள் காணப்பட்டன.

இந்நிகழ்வில் வை. எம். எம். ஏ. பேரவை ஒரு அறிக்கையினையும் உத்தேச வரைபினையும் அன்று இருந்த நீதி அமைச்சர் தலதா அதுகொரளவிடம் கைளித்தது. அதே போன்று முஸ்லிம் சமய கலாசார தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம், அமைச்சின் செயலாளர், அமைச்சர்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தெளிவைப் பெறக் கூடிய வகையில் எவை. ஏம். எம். ஏ பேரவை அன்று செயற்பட்டது.

ஓட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஜனாஸா அடக்கம் தொடர்பில் செயற்பட்டது போல் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த முஸ்லிம் தனியார் சட்டம் பறிபோகக் கூடாது என்ற விடயத்திலும் ஒருமித்த கருத்தில் இருந்து செயற்படுவதைப் பார்க்கின்ற போது மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றது. இந்த விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது.

நேர்காணல்
இக்பால் அலி

No comments:

Post a Comment