290 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தல் : 'பொப் மாலி' உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதியளித்தது நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 11, 2021

290 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தல் : 'பொப் மாலி' உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதியளித்தது நீதிமன்றம்

எம்.எப்.எம்.பஸீர்

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ‘பொப் மார்லி’ என அழைக்கப்படும் சமிந்த தாப்ரேவ், அவரது 2 ஆவது மனைவி என கூறப்படும் பெண் உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு சிறப்பு குழுவுக்கு நேற்று அனுமதியளித்தது.

எல்பிட்டிய - கெட்டபொல பகுதியில் உள்ள இறப்பர் தோட்டம் ஒன்றின் நடுவே தனியாக அமையப் பெற்றுள்ள வீடொன்றில் மறைந்திருந்த பொப் மாலி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று அவரும் அவருடன் கைது செய்யப்பட்ட பெண் உட்பட இருவரும் கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது போதைப் பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற நீதிவான் சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்ததுடன் அன்றையதினம் பி.ப. 2.00 மணிக்கு முன்னர் அவர்களை மன்றில் ஆஜர் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிட்டார்.

இந்நிலையில் தடுப்புக் காவலில் குறித்த மூவரிடமும் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த விஜேசேகரவின் ஆலோசனைக்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்சர் தரங்க சேமசிங்கவின் தலைமையிலான பொலிஸ் பரிசோதகர் பெத்தும் குமார உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போதைப் பொருள் விவகாரத்தில் ஏற்கனவே அஹுங்கல்லை, பலபிட்டிய மற்றும் ஹபராதுவை பகுதிகளைச் சேர்ந்த 31 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்ட ஐவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு பெறப்பட்ட 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய உளவுச் சேவை வழங்கிய தகவலுக்கு அமைய தென் கடலில் விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பேருவளைக்கு அப்பாலுள்ள ஆழ் கடலில் இருந்து கரையை நோக்கி வந்த ஆழ்கடல் மீன்பிடி படகு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் மற்றும் கடற்படையினர் இணைந்த குழு குறித்த மீன் பிடிப்படகினை கடலிலேயே கடந்த அகஸ்ட் 31 ஆம் திகதி சுற்றி வளைத்து சோதனைச் செய்துள்ளது.

இதன்போது குறித்த மீன்பிடிப் படகில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 உர பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை சோதனைச் செய்த போது 259 சிறிய பொதிகளாக பொதியிடப்பட்டிருந்த 288 கிலோ 644 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, படகில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment