ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் : பொலிஸாரும், பொதுமக்களும் ஒத்துழைப்புடன் செயற்பட்டால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது - அமைச்சர் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Friday, September 3, 2021

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் : பொலிஸாரும், பொதுமக்களும் ஒத்துழைப்புடன் செயற்பட்டால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது - அமைச்சர் சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. இலங்கையின் பொலிஸ் சேவை 155 ஆவது வருடத்தை பூர்த்தியாக்கியுள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க பொலிஸார் தங்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் சேவையில் ஈடுப்படுகிறார்கள். வீதியில் சேவையில் ஈடுபடும் பொலிஸாரின் மனநிலையை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கையின் பொலிஸ் சேவை 155 ஆவது வருடத்தை பூர்த்தி செய்ததை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வீதியில் சேவையில் ஈடுபடும் பொலிஸாரின் மனநிலையை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டும். என்பதற்காக பொதுமக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட முடியாது. இரு தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட்டால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளில் பொலிஸார் திறம்பட செயற்படவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்று இரண்டு வருட காலப்பகுதியில் பொலிஸ் திணைக்களம் சிறந்த முறையில் செயற்பட்டு பல சாட்சியங்களை திரட்டியுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 32 பேருக்கு எதிராக 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணை நடவடிக்கைகளுக்காக மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

இவையனைத்தும் பொலிஸாரின் துரிதகர செயற்பாடுகளினால் சாத்தியமானது என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் வழங்கப்படும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிச்சயம் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment