100 மாணவர்களுக்கு குறைவான 3,000 பாடசாலைகளை திறப்பதற்கு பரிந்துரைகளை பெற பணிப்பு : பொருளாதார மத்திய நிலையங்களைத் தொடர்ந்து திறந்து வைத்திருக்குமாறும் பணிப்பு - News View

Breaking

Friday, September 10, 2021

100 மாணவர்களுக்கு குறைவான 3,000 பாடசாலைகளை திறப்பதற்கு பரிந்துரைகளை பெற பணிப்பு : பொருளாதார மத்திய நிலையங்களைத் தொடர்ந்து திறந்து வைத்திருக்குமாறும் பணிப்பு

நாட்டில் காணப்படுகின்ற 100 க்கும் குறைவான மாணவர் தொகையைக் கொண்ட கிராம மட்டத்தில் உள்ள பாடசாலைகளையேனும் ஆரம்ப கட்டமாக திறக்க முடியுமா? என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் வெள்ளிக்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, தடுப்பூசி வழங்குதல் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்த கலந்துரையாடலின் பிரதான கருப்பொருளாகக் காணப்பட்டது.

இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு தேவையான ஒரு இலட்சத்து 20,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் அடுத்த வாரத்தில் கிடைக்கப் பெறவுள்ளதாக இதன்போது விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களில் பெருமளவானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்றும், இவர்களில் அதிகமானோர் முதற்கட்டமாகவேணும் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்றும் இதன்போது சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

இதனால் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அத்தோடு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் பின்வாங்குபவர்களுக்கு அது தொடர்பில் தெளிவுபடுத்துமாறும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

மரக்கறிகளை பயிரிடும் விவசாயிகள் அவற்றை சந்தைகளுக்கு விநியோகிக்க முடியாமையால் பாரிய இன்னல்களை எதிர்கொண்டுள்ளதால், பொருளாதார மத்திய நிலையங்களை தொடர்ந்து திறந்து வைத்திருக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

மேலும் 2020 மற்றும் 2021 இல் பாடசாலைக்கு செல்ல முடியாமல் போன 7 இலட்சம் சிறுவர்களுக்கான ஆரம்ப கல்வி மற்றும் அவர்களது கல்வியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

100 க்கும் குறைவான மாணவர் தொகையைக் கொண்ட 3000 பாடசாலைகள் கிராம மட்டங்களில் உள்ளன.

அதற்கமைய முதற்கட்டமாக அவ்வாறான பாடசாலைகளை திறக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார மற்றும் கல்வித்துறை சார் அதிகாரிகள் உள்ளடங்கிய தொழிநுட்ப குழுவிற்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, பவித்ரா வன்னியாரச்சி, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, மஹிந்தானந்த அழுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, ரமேஸ் பதிரண, நாமல் ராஜபக்ஸ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சிசிர ஜயகொடி, சன்ன ஜயசுமன, நாடாளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோரும் முப்படைத் தளபதிகள், மாகாண மற்றும் பிரதேச சுகாதாரப் பணிப்பாளர்கள் ஆகியோரும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment