ஒக்டோபர் 01 இல் நாட்டை திறக்க எதிர்பார்ப்பு, இறுதித் தீர்மானம் 30 இல் என்கிறார் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Saturday, September 25, 2021

ஒக்டோபர் 01 இல் நாட்டை திறக்க எதிர்பார்ப்பு, இறுதித் தீர்மானம் 30 இல் என்கிறார் கெஹெலிய

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை ஒக்டோபர் முதலாம் திகதி நீக்கி நாட்டை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், இதன் போது சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எனினும் இது தொடர்பான இறுதித் தீர்மானம் இம்மாதம் 30 ஆம் திகதி எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது குறித்த வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் அமைச்சர் அவதானம் செலுத்தினார்.

தற்போது மத்திய மாகாண சபைக்கு கீழ் நிர்வகிக்கப்படும் நாவலப்பிட்டி வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் பொறுப்பிலெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் சுகாதார விதிமுறைகளை முறையாக பேணுமாறு மக்களிடம் கோருவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார். அவ்வாறு செய்வதன் மூலம் கொவிட் பரவலை மிகவும் வெற்றிகரமாக ஒழிக்க முடியும் என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

சுகாதார தரப்பினர் அவர்களின் பொறுப்பை முறையாக செய்யும் போது மக்களும் அவர்களின் கடமையை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்பதை அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

மிகவும் வெற்றிகரமாக கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

30 வயதுக்கு மேற்பட்டோரில் இரு கட்டங்களாகவும் பெருமளவானோருக்கு தடுப்பூசி வழங்கிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் பத்து நாடுகளுக்குள் இடம்பிடித்துள்ளது. அதற்கமைய இது வரையில் 3 - 4 நாடுகளுக்கிடையில் இலங்கை காணப்படுகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment